தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம், இந்த ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் கரூர் சென்று செந்தில் பாலாஜியின் பெற்றோர் கையில் சம்மனை கொடுத்துவிட்டு வந்தனர்.
ஆனால் நேற்று செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் ஆஜராகவில்லை.
இந்த சூழலில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘எனக்கும் குதிரை பேரத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரும் இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்றுக் கண்ட நீதிபதி குமரப்பன் சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்கை மாற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு மாற்றப்பட்டது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
