100% நேர்மையான முறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்கிறார்கள் என்று தவெகவின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விஜய் தலைமையிலான அரசு மீது அக்கட்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞரே குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறாக தகவல்கள் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் (Applications) வந்துள்ளன. மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தகுதியானவர்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றனர்.

பணம் பெற்றுக்கொண்டு தவறான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மை இல்லாதது. நேற்று மாலைதான் இதற்கான அரசாணையே (G.O) வெளியிடத் தொடங்கப்பட்டது. அதற்குள் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெறும் ‘போலீஸ் வெரிஃபிகேஷன்’ உள்ளிட்ட சரிபார்ப்பு நடைமுறைகளைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துள்ளது. யாராவது பணம் வாங்கிக்கொண்டோ அல்லது அமைச்சரின் பெயரையோ, கட்சியினர் பெயரையோ தவறாகப் பயன்படுத்தினாலோ உடனடியாகப் புகார் அளிக்கலாம். புகார் அளித்தால் அவர்கள் மீது எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, சோலார் (Solar) துறையில் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வசூலில் ஈடுபட முயன்ற நபர் குறித்து உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

தற்போது வழங்கப்படும் இந்த நியமனங்கள் அனைத்தும் 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது மட்டுமே. அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். தற்காலிகமாக நியமிக்கப்படுவதால், யாராவது தகுதியற்ற நபர்கள் இருப்பது தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக அவர்களை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி எந்தவொரு தவறும் நடக்காமல், நேர்மையான முறையில் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன.

தவெக வழக்கறிஞரே லஞ்சம் தொடர்பான குற்றாச்சாட்டை முன் வைத்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ” உள்ளே இருக்கும் போட்டி காரணமாகச் சிலர் இதுபோன்ற புகார்களைக் கூறலாம். ஆனால், லஞ்சத்திற்கு இங்கு இடமே இல்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போதுதான் முற்றிலும் நேர்மையான முறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறுகிறது என்று எங்களால் தைரியமாகச் சொல்ல முடியும். ஏழை, எளிய மக்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் உரிய நியாயத்தைப் பெற்றுத் தருவதே இந்த அரசின் நோக்கம்.

கீழமை நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் சுமார் 800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, பின்னணித் தகவல்களை சரிபார்த்து முடித்த பிறகு அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக இன்றைக்குள் அல்லது நாளை மாலைக்குள் அனைத்து நியமன நடைமுறைகளும் முழுமையாக நிறைவடையும்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share