சிபிஐ விசாரித்து வரும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை தடுக்கவும், விசாரணை நிலுவையில் இருக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனான தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் கேட்டு திமுக சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
முதல்வர் விஜய் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஜூலை 2ம் தேதி பேசியது கரூர் வழக்கில் சாட்சிகளை பாதிக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.
அதேசமயம் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக முதலமைச்சர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகள் என்பதால் அவர்களை விஜய் உள்ளிடோர் சந்தித்து பேசுவது விசாரணையை பாதிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆர் எஸ் பாரதி சார்பில் இன்று (ஜூலை 6) மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அஹ்மதி, நீதிபதிகள் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு அமர்வில் ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.
அதில், ‘கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் சாட்சிகளை களைக்கும் முயற்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் இப்போது என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நாளை இந்த வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
