சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 100 நாள் வேலைத்திட்ட பணியிடத்தில் தவெக நிர்வாகி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டி ஏ பகுதியில், இன்று காலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத்திட்டம்) கீழ் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற நிர்வாகி, பணியை மேற்பார்வையிடும் நபர்களிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கத்தியைக் காட்டி மிரட்டல்
தான் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும் என அவர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சக்தி, தனது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, “நான் சொல்றவங்களுக்கு வேலை தரவில்லை என்றால் இங்க யாரும் வேலை செய்யக் கூடாது” என அங்கிருந்த பெண்களை மிரட்டியுள்ளார்.
வீடியோவால் பரவும் பரபரப்பு
100 நாள் வேலை இடத்தில் தவெக நிர்வாகி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டும் இந்த அராஜகக் காட்சி, அங்கிருந்த சிலரால் செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் பொதுமக்களும், பெண் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.
