100 நாள் வேலை திட்டம் காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக அதன் பெயர் விபி ஜி ராம் ஜி என்று மாற்றி அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும் நலிவுற்ற மக்களை வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும் அனைத்து திட்டங்களும் இது மாநில அரசினுடைய திட்டம் ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசின் பல முன்னோடி திட்டங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதாக பல்வேறு ஒன்றிய அமைச்சர்களின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது.
இருப்பினும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். எந்த ஒரு ஒன்றிய அரசு திட்டம் ஆனாலும் பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து கால தாமதத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வரு⁸கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2025-26 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.1026 கோடி ஊதியத்திற்கான தொகையையும் ரூ.1087 கோடி பொருள் கூறுக்கான தொகையும் இன்று வரை விடுவிக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயர்நீர் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது; பிரதம மந்திரி கிராம சபை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி ஒரு தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதியில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் தான். மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம்.
இந்த வஞ்சனையை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தற்போது ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி அதற்கு பதிலாக வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலை வாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என்று விபி ஜி ராம்ஜி என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு ஊரகப் பகுதிகளை பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 65 குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடல் உழைப்பை தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விபிஜி ராம்ஜி திட்டத்தை அறிமுக நிலையிலேயே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றாக குரல் எழுப்பி இருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்த திருத்த சட்டத்தை நிறைவேற்றி விட்டது. இந்த புதிய திட்டமானது மக்களின் தேவை அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இது குறித்து நான் ஏற்கனவே பிரதமர் அமைச்சர் அவர்களுக்கு கடந்த 18. 12 .2025 அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்.
இந்த புதிய வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தங்கள் அனுமதி பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;
உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும்;
மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;
இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது.
எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;
தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு ‘வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் ஊரகம் (VB-G-RAM-G)’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது” என்று கூறினார்.
பின்னர் இந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
