முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 7) விசாரிக்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோன்று வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
முதல்வர் விஜய் திருச்சி கிழக்கில் பெற்ற வெற்றியை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 12 தேர்தல் வழக்குகளும், 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு 23 வழக்குகளும், 2021 தேர்தலுக்கு பிறகு 13 தேர்தல் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
