ராஜன் குறை
ஆறு மாதம் வரை புதிய ஆட்சிக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் பலரும் கூறுகின்றனர். உண்மைதான். நடிகர் விஜய் அளித்த அசாத்தியமான வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால் இந்த ஆறுமாத அவகாசத்தைக் கோரலாம். ஆனால் ஆட்சி தான்தோன்றித்தனமாக நடந்தால், முதலமைச்சர் எந்த குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்காமல் இருந்தால் அதை விமர்சிக்க ஆறுமாதம் காத்திருக்க முடியாது.
விஜய் ஆட்சியின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால் அவர் ஆட்சிக்கு வந்த முறைதான். அவர் ஜோசப் விஜய் என்ற தனி நபராக மக்களிடையே பணியாற்றி, கட்சிப் பணியாற்றி, அதன் மூலம் தலைவராக உருவெடுத்து ஆட்சிக்கு வரவில்லை. திரைப்படங்களில் கதாநாயகனாக பிறர் இயக்கத்தில், பிறர் எழுதிய கதையில், அவர்கள் எழுதிய வசனத்தைப் பேசி நடித்து, அதன் மூலம் மக்களைக் கவர்ந்து. அந்த திரைக்கதாநாயக பிம்பமாகத்தான் ஆட்சிக்கு வந்துள்ளார்.
அவர் கட்சிக்காரர்களிடமே அவர் நெருங்கிப் பழகியதாகத் தெரியவில்லை. புஸ்ஸி ஆனந்த் என்பவர்தான் அவுட்சோர்ஸிங் முறையில் கட்சிக் கட்டமைப்பை உருவாக்கினார். கடைசி நேரத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என பலரும் வேட்பாளர்களாக தேர்வானார்கள். ஆனால் எல்லா தொகுதிகளிலும் விஜயே நிற்பதாக நினைத்து அந்தந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விஜய் கூறினார். இது ஒரு தொகுதியின் வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நடைமுறையையே மாற்றியது. வேட்பாளர் யாரென்றே தெரியாமல் விஜயின் விசில் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்ததில் தேர்தல் நடைமுறை பொருளிழந்தது.

உதாரணமாக குழந்தைக்கு மாத்திரையை செல்போன் திரையில் கிரெடிட் கார்டால் போதை மருந்துபோல தோற்றமளிக்கும்படி பொடி செய்து கொடுத்ததாகச் சொல்லும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் என்பவருடன் விஜய்க்கு எந்த அளவு பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவரை வேட்பாளராக அறிவிக்கும் போது கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல ஒரு காணொலி உள்ளது. ஆனால் அந்த அமைச்சர் போதை மருந்தை பயன்படுத்தியதாக சர்ச்சைக்குள்ளான போது விஜய் அவருக்கு ஆதரவாக எதுவுமே கூறவில்லை. அவரை பதவி நீக்கமும் செய்யவில்லை. மக்கள் விஜய்க்காகத்தான் சரத்குமாருக்கு வாக்களித்தார்கள் என்னும்போது விஜய் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் காலம் கடத்துவது சரியா என்பதே கேள்வி.
மக்கள் விஜய் என்னும் கதாநாயக பிம்பத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவரை முதல்வராக வைத்துக்கொண்டு யார், யாரோ ஆட்சி செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் விஜய் எதைக் குறித்தும் பேசுவதில்லை. ஊடகங்களை சந்திப்பதில்லை. கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. பொறுப்பேற்பதில்லை. இதனால் மக்கள் எந்த பிம்பத்திற்கு வாக்களித்தார்களோ அந்த பிம்பத்திற்கு உரியவர்தான் ஆட்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இது வெறும் குறியீடாக அரியணையை அலங்கரித்த மன்னர்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதனால் நாம் சற்றே விரிவாக மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்குமான வேறுபாடுகளை ஆராய வேண்டியுள்ளது.
மன்னராட்சி: ஒரு ஃபிளாஷ்பேக்
மானுடம் சில ஆயிரம் ஆண்டுகள் மன்னராட்சியைத்தான் பின்பற்றியது. ஆனால் அதன் வடிவம் குடியரசாக இருக்க வேண்டும் என்ற முயற்சியும் தொடர்ந்து பலவகைகளில் நடக்கத்தான் செய்தது. குடியரசிற்கும், முடியாட்சிக்கும் என்ன முரண்பாடு அல்லது வேறுபாடு என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். குடியரசு என்பது விழுமியங்களின், தர்மத்தின், சட்டத்தின் ஆட்சி. மன்னர் என்று ஒருவர் இருந்தாலும் அவரும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டுதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே குடியரசின் தத்துவம்.

கண்ணகியின் சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல் என்று தெரிந்ததும் கோவலனுக்கு தவறுதலாக மரண தண்டனை விதித்த பாண்டிய மன்னன்“பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்” என்று கூறி உயிர் விட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுவது இதைத்தான். அதாவது, மன்னராக இருந்தாலும் அவரை விட அற நெறி பெரியது. அவரும் அதற்குக் கட்டுப்பட்டவர்தான். நெறிபிறழாமல் செம்மையாக கோலோச்சுவதே செங்கோல் ஆட்சி.

அப்படி அரசன் நெறியுடன் ஆட்சி செய்யாமல் தன் ஆதிக்கத்தை செலுத்தினால், குடிநபர்கள் அவரை எதிர்க்கலாம் என்பதற்கும் தமிழ் பண்பாட்டின் உதாரணமாக திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்ற கூற்று விளங்குகிறது. திருநாவுக்கரசர் சைவராக மாறியபோது அவரை தண்டிக்க முற்பட்ட பல்லவ மன்னனுக்கு அஞ்சிடாமல் அவர் பாடியது இந்த வரி.
இந்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ளலாம் என்றால் மன்னராட்சி என்பது எல்லா காலங்களிலும் வெறும் சர்வாதிகாரமோ, எதேச்சதிகாரமோ, கொடுகோண்மையோ கிடையாது. அதுவும் பொதுவான அறநெறிகள், குடிகளின் நலன், அவர்கள் சுதந்திரம் ஆகியவற்றை அனுசரித்தே நடக்க வேண்டும் என்ற அடிப்படைதான் முக்கியமானது. எல்லா காலத்திலும் மூன்று அம்சங்கள் தவிர்க்க முடியாதவை.
ஒன்று, சமூக ஒழுங்கை உருவாக்கும், பாதுகாக்கும் பொதுநெறிகள், விழுமியங்கள், சட்டங்கள்.
இரண்டு, குடிநபர்களின் உரிமைகள். அதாவது அவர்களது விருப்பத்திற்கேற்ப பொது நெறிகளுக்கு உட்பட்டு வாழும் உரிமை.
மூன்று, சமூக இயக்கத்தை நிர்வகிக்கும் அரசின் தலைமை.
மனித நாகரீகங்கள் எல்லாம் மன்னராட்சியில்தான் தழைத்தோங்கின. கலைகளும், இலக்கியமும், அறிவியலும் வளர்ந்தன. அதற்கான காரணம் இந்த மூன்று அம்சங்களும் அவ்வப்போது ஒத்திசைவுடன் இயங்கியதுதான். அப்படி நடக்காதபோது போர்களும், வன்முறையும். பொது ஒழுங்கின் சீர்குலைவுகளும் ஏற்பட்டன.
மன்னராட்சியின் குறைகள் எவையென்றால் மன்னர் என்ற தனிநபரிடம் இறையாண்மை என்பது மொத்தமும் குடியிருக்கும்; அவராகப் பார்த்து அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பனவே. நல்ல திறமையான அரசர் அமைந்துவிட்டால் அவர் பொறுப்பாக கலந்தாலோசித்து முடிவெடுப்பார். தகுதியானவர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பார். அறநெறிகளை அனுசரிப்பார். அசோகர், அக்பர் என்று உதாரணங்களைச் சொல்வார்கள்.
அப்படியில்லாமல் திறமையற்ற அரசர் அமைந்தால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரைப் பயன்படுத்திக்கொண்டு ஆளாளுக்கு அதிகாரம் செய்வார்கள். நெறிகளும், கட்டுப்பாடுகளும் பலவீனப்படும். அரசரே தீய குணங்களுடன் இருந்தால், ஆடம்பரப் பிரியராக, அதிகார வெறி கொண்டவராக இருந்தால் இன்னும் பெரிய சிக்கல்தான். அவரை எப்படி யார் கட்டுப்படுத்துவது, நெறிப்படுத்துவது என்பது சவாலாக மாறிவிடும். அரசு சீர்குலைந்து, நாடு அந்நியரிடம் அடிமைப்படும். மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள். அதனால்தான் சங்க இலக்கியத்தில் மோசிகீரனார் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்றார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு ஊடகமும், முதலீட்டிய நடைமுறைகளும் பெருகிய போது குடியரசு தத்துவம் மீண்டும் வலுவடையத் துவங்கியது. தனி நபரிடம் அதிகாரம் குவியக்கூடாது, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகளே முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. மன்னரே இருந்தாலும், அவர் அதிகாரங்கள் அந்த சபைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பிறகே மக்களாட்சி சிந்தனைகளும், அவற்றை நடைமுறைப்படுத்த தேசியவாத சிந்தனைகளும் உருவாயின.
நவீன மக்களாட்சியில் தலைமைப் பொறுப்பு
நவீன மக்களாட்சி தனி நபரிடம் அதிகாரம் குவிவதை முற்றிலும் தவிர்க்க விரும்பியது. அது எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற புதிய மானுடவாத முழக்கம் உருவானது. ஒவ்வொரு மனிதரும் பகுத்தறிவுடன் சிந்தித்து தேர்வுகளை மேற்கொள்ளும் உரிமை கொண்டவர்கள் என்று உணரப்பட்டது. எனவே சமூக ஒழுங்கு என்பது அனைவரும் விவாதித்து, சிந்தித்து வகுக்கும் சட்டங்களாக இருக்க வேண்டும், சமூக ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
இப்படியெல்லாம் சிந்தனைகள் உருவானாலும், எந்த ஒரு அமைப்பிலுமே தலைப் பொறுப்பில் ஒருவர் இருக்க வேண்டும் என்ற தேவையும் தொடர்ந்தது. என்ன காரணம் என்றால் என்ன செய்யலாம் என்பதற்கு பல்வேறு விடைகள் தோன்றும்போது, ஒன்றைத்தான் நடைமுறைப்படுத்த முடியும். அப்போது அந்த இறுதி முடிவை எடுக்கும் நிலையில் ஒருவர் தலைவராக இருப்பதுதான் வசதி. இதுதான் கூட்டியக்கத்தின் இன்றியமையாமை.
பழங்குடியினர் பத்து பேர் வேட்டைக்கு புறப்பட்டால் கிழக்கே போவதா, மேற்கே போவதா என்ற கேள்வி எழும். ஆளாளுக்கு ஒரு காரணம் கூறி விவாதிக்கலாம்; ஆனால் ஒற்றை முடிவைத்தான் எடுக்க வேண்டும். அதனால்தான் அந்த குழுவுக்கு தலைவர் இருக்க வேண்டும். அந்த தலைவர் எல்லா கருத்துக்களையும் கேட்டுவிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதே சூழ்நிலைதான் பத்தாயிரம் கோடி வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் கம்பெனிக்கும். ஒரு தொழிற்சாலையை தொடங்குவதா அல்லது ஒரு தொழிற்சாலையை மூடுவதா என்ற கேள்வி எழும்போது பல்வேறு நிர்வாகிகள் பல கருத்துக்களைச் சொல்வார்கள். சி.இ.ஓ என்ற தலைமைச் செயலதிகாரி ஒருவர் இருந்தால்தான் அவர் ஒற்றை முடிவை எடுத்து செயல்படுத்த முடியும்.
ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் வேண்டும்; ஒரு நாடகக் குழுவிற்கு, திரைப்படத்திற்கு இயக்குனர் வேண்டும்; ஒரு விளையாட்டு அணிக்கு காப்டன் வேண்டும்; ராணுவத்திற்குத் தளபதி வேண்டும்; ஒரு குடும்பத்திற்கும் தலைவனோ, தலைவியோ வேண்டும். அதே போல ஒரு நாட்டினை மக்கள் பிரதிநிதிகள் அவை ஆண்டாலும், அதிலும் ஒரு தலைமை அமைச்சர், பிரதமரோ, முதல்வரோ ஏதோ ஒரு பெயரில் இருக்க வேண்டும்.
ஒற்றை முடிவெடுக்க ஒருவரே தலைமைப்பொறுப்பில் இருக்க வேண்டும் என்றாலும், நவீன சிந்தனையில் அவர் விதிமுறைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டவர் என்பதுடன். பிறருடன் அவசியம் கலந்தாலோசிக்க வேண்டியவர். அவரது அதிகாரங்கள் பல உப அமைப்புகளிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மன்னராட்சியில் அவர் விரும்பினால் பகிரும் அதிகாரம், நவீன அமைப்புகளில் சட்ட ரீதியாகவும், நெறிமுறைகள் படியும் கட்டாயமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நிறுவன அளவில் பகிர்ந்தளிப்பது மட்டுமே மக்களாட்சியை உறுதி செய்யாது. அதற்கும் மேலாம் பொதுமன்ற சிந்தனை, விவாதம், பகுத்தறிவு என்பது மிக முக்கியமானது. அவ்வாறான சிந்தனையில், பகுத்தறிவில், விவாதங்களில் உருவாகும் விழுமியங்களே குடியரசை வழிநடத்தும்.இதற்கு மிகவும் அவசியமானது தலைவர்களின் சிந்தனைப் பகிர்வு. அவர்கள் எண்ணங்களைப் பகிர்வதும், பிறர் எண்ணங்களுடன் பொதுமன்றத்தில் உரையாடுவதுமே மக்களாட்சியின் அடிநாதம்.

நடிகர் விஜய் ஏன் மன்னராகப் பார்க்கிறார்?
தனது திரைப்பிம்பத்தை முதலீடு செய்து ஆட்சிக்கு வந்துவிட்ட ஜோசப் விஜயால் அரசியல் தலைவராக மாற இயலவில்லை. அவரால் பிரச்சினைகளைக் குறித்து சிந்தித்து, தன் சிந்தனைகளைப் பேசி, பகிர்ந்து ஆட்சி செய்ய இயலவில்லை. அதனால் ஊடகங்களை சந்திப்பதையே தவிர்க்கிறார். அவரால் கேள்விகளை எதிர்கொண்டு சிந்தித்து பதில் சொல்ல இயலாது. ஏனெனில் அந்த அளவு அவர் அரசியல் பிரச்சினைகளை பயின்றதாக, ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

அதனால் அவருக்கு நெருக்கமானவர்களை அவரது தனி ஆலோசகர்களாக அல்லது செயலர்களாக நியமித்துக்கொள்கிறார். அவரது வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி ஒருவர். அவருடைய நெருங்கிய நண்பரும், ஆந்திர தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டி என்பவர் மற்றொருவர். அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பில் பங்கெடுத்த ஜெகதீஷ் பழனிசாமி என்பவர் அவரது தனிச்செயலர். இந்த ஒட்டுமொத்த குழுவும் ஒரு உள்வட்டமாக, அந்தக்கால அரண்மனை அதிகார மையமாக விளங்குகிறது என்று தெரிகிறது.
இதற்கு வெளியே, அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட சிலர் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். அரசின் நிலைபாட்டை, கட்சி நிலைபாட்டை தெரிவிக்கிறார்கள். இவர்கள் அதிகாரத்தின் வெளிவட்டம் போல இருக்கிறார்கள்.
இது போன்ற உள்வட்டம், வெளிவட்டம் எல்லாம் பல்வேறு ஆட்சியாளர்களிடமும் இருப்பதுண்டு. ஏன், அவசியம் உருவாகியே தீரும் என்றுகூட சொல்லலாம். அதே போல முதலமைச்சர்களோ, பிரதமர்களோ அவர்களாகவே எல்லா முடிவுகளையும் எடுக்கவே முடியாது. எடுக்க மாட்டார்கள். பல சமயங்களில் சந்தர்ப்ப வசமாக சிலர் முதல்வராகவோ, பிரதமராகவோ ஆகிவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் குறியீட்டுத் தலைமையாக இருப்பார்கள்.

உதாரணமாக பீஹாரில் லாலு யாதவ் கைது செய்யப்பட்டபோது, அவர் மனைவி ராப்ரி தேவி முதல்வராக்கப்பட்டார். அவர் பிற கட்சிக்காரர்கள் துணையுடன் ஆட்சி செய்து, அடுத்த வந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். அதுவரை குடும்பத் தலைவியாக விளங்கிய ராப்ரி தேவி அவராகவே ஆட்சி நிர்வாகத்தை செய்திருப்பார் என்பது சாத்தியமல்ல. அவரைச் சுற்றியிருந்த அமைச்சர்கள், செயலர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றுதான் ஆட்சி செய்திருப்பார் என்பது உறுதி. ஆனால் அவர் விரைவில் பொறுப்பேற்கவும். முடிவு எடுக்கவும் பழகிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் மக்களிடம், கட்சிக்காரர்களிடம் எளிதில் பழகக் கூடியவராகவும் இருந்தார்.
விஜயின் பிரச்சினை என்னவென்றால் அவரது ஆலோசர்களான ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் அமைச்சரவை கூட்டத்திற்கே அவருடன் வருகிறார்கள் என்பதுதான். இது தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளுனரிடம் புகார் செய்துள்ளன. அதைக் குறித்தும் விஜய் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. உளவுத்துறை அறிக்கைகள் கூட விஜய் உள்வட்ட உறுப்பினர்களால் படிக்கப்படுவதாக பேச்சு எழுந்தள்ளது. இது போல பொதுமன்றத்தில் எழும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட, எந்த குரலாலும் எட்ட முடியாத ஒரு ஆட்சியதிகார பிம்பமாகவே அவர் இருக்கிறார். அதுதான் அவரை மன்னர்கால நடைமுறைக்குக் கொண்டு செல்கிறது.
திடீர் போர்ப்படை போல திரட்டப்படும் கட்சி
வரலாற்றில் பெரும்பாலும் மன்னர்களிடையே நிலையான படைவீரர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். போர் என்று வந்துவிட்டால் முரசொலித்து படைக்கு ஆட்களை சேர்ப்பார்கள். படையில் சேர்வது ஆபத்து என்றாலும், அதனால் சில ஆதாயங்களும், மரியாதையும், எதிரி நாட்டை சூறையாடும் வாய்ப்பும் வீரர்களுக்குக் கிடைக்கும் என்பதால் குடிமக்கள் வந்து சேர்வார்கள். இவ்வாறு திரட்டப்படும் படைக்கு பயிற்சியளித்து, அணிவகுத்து நட த்த திறமையான தளபதிகள் தேவை. இல்லாவிட்டால் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும்.
திரைநாயக பிம்பத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த பின் விஜய்க்கு கட்சிக் கட்டுமானம் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில் கட்சிதான் ஆட்சிக்கும் மக்களுக்கு இடையே பாலமாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த இடைவெளியில் எதிர்கட்சி புகுந்துவிடும். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்தது போல ஆட்சி செய்வது கடினம். அதனால்தான் இப்போது முழு மூச்சாக அ.இ.அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க என பல்வேறு கட்சிகளை வளைத்துப் போட முழு மூச்சாக இறங்கியுள்ளது த.வெ.க. அப்படி செய்தாலும் எந்த அளவு ஒரு கட்சிக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று தெரியவில்லை.
ஏனெனில் அ.இ.அ.தி.மு.க-வே திரைபிம்ப தலைமையில் இயங்கியதுதான். அதன் கட்சிக் கட்டமைப்பே வலுவானது என்று சொல்ல முடியாது. அதனால்தான் தொடர்ந்து அந்த கட்சியில் உருவான ஆற்றல் மிக்க தலைவர்கள் தி.மு.க-வில் இணைந்து விடுவார்கள். அ.இ.அ.தி.மு.க திரவ வடிவில் இயங்குமே தவிர, திட வடிவில் இயங்க முடியாது. ஆனால் காற்று போல அருவமாக இருக்கும் த.வெ.க-விற்கு திரவ வடிவமாவது இப்போது தேவை என்பதால்தான் அ.இ.அ.தி.மு.க-வை கைப்பற்ற தொடர்ந்து முயற்சிக்கிறது. இதுவும் தமிழ்நாடு இதுவரை காணாத மன்னராட்சித் தருணம் எனலாம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைவதுதான் விஜயின் கரூர் விஜயம். அவரது பொறுப்பற்ற திட்டமிடல், கூட்டக்காட்சி அரசியல், கட்சி அணியினரின் அனுபவமின்மை, திறமையின்மை, அவரது ரசிகர்களின் வெறித்தனமான பிம்ப வழிபாடு ஆகியவற்றால் ஏற்பட்ட நெரிசல் மரணங்களின் களங்கத்தை இப்போது எப்படியாவது நேர் செய்துவிட வேண்டும் என நினைக்கிறார், இதுவரை விஜய் அந்த துயர நிகழ்விற்கான தன்னுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்கவேயில்லை என்பது முக்கியமானது. அவர் மீது பிறர் பழி போடுகிறார்கள் என்றார்: இப்போது ஆதவ் அர்ஜுனா அபத்தமாக காவல்துறை மீது பழிபோடுகிறார்.
அது போதாதென்று அந்த நெரிசலில் உயிரிழந்த நாற்பத்தோரு பேரின் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு அரசு வேலை வழங்கப் போவதாகக் கூறுகிறார் விஜய். எந்த அளவு மன்னராட்சி மனோபாவத்தில் இருக்கிறார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அவர் கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்திற்கு எதற்கு தமிழ்நாட்டு அரசு இழப்பீடு தரவேண்டும் என்பது முக்கியமான கேள்வி. அவரே சொந்தப் பணத்திலிருந்து ஆளுக்கு ஒரு கோடி கொடுக்கலாம்; கட்சி நிதியிலிருந்து கொடுக்கலாம். அரசு இழப்பீடு தர வேண்டும், வேலை வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணம் வன்மையான கண்டனத்திற்கு உரியது. தன்னை மன்னராக கருதிக்கொள்பவரால்தான் இப்படி சிந்திக்க முடியும்.
