விஜய் ஆட்சிக்கு கவசமாக இருப்போம் : வைகோ

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக எதிரணியில் இருந்து வீசும் கணைகள் அனைத்துக்கும் மதிமுக கவசமாக இருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், வைகோ மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் இன்று (ஜூலை 5) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், எதிரி கட்சிகளாக இருந்த அதிமுக திமுக இன்றைக்கு எதிர்க்கட்சிகளாக இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக செயல்படுகிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு வைகோ, “அதிமுக ஆட்சி அமைக்கவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கவும் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் சொல்லிவிட்டார். அப்படி ஒரு நிலைப்பாடு எடுத்து இருந்தால் அதைவிட அரசியல் மோசடி ஒன்றும் இருக்க முடியாது என்று நான் கூறினேன்.

இப்போது ஆளுநரை பார்ப்பதற்கு அதிமுகவும் திமுகவும் செல்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த ஆளுநர் அர்லேகர், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை தான் எடுத்துக் கொண்டு நீர் நிலைகள், விவசாய இடங்களை பார்வையிடுகிறார். இங்கு வேலைகள் எல்லாம் நடக்கவில்லையே என்று கூறி, கவர்னர் மாளிகையில் இருந்து நாங்களே இறங்கி செய்வோம் என்று பேசுகிறார். எதுவாக இருந்தாலும் என்னிடம் வந்து சொல்லலாம் என்கிறார். இவர் மத்திய அரசின் பாண்டட் லேபர். இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

இங்கு என்ன கவர்னர் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய முதல்வர் விஜய்க்கு தேவையான 118 இடங்கள் சேர்ந்து விட்டது என்று தெரிந்த பிறகும், கவர்னர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்ட பிறகும் தான் கேரளாவுக்கு போகிறேன் என்று கூறி ஆளுநர் இங்கு இருக்க மாட்டார். இதிலேயே இவருடைய ஓர வஞ்சகம் தெரிகிறது.

இந்த சூழலில், ஆட்சி அமைக்க கோரி வரும் விஜயை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று டெல்லியில் இருந்து அறிவுறுத்தல்கள் வந்ததால் தான் அவரை சந்தித்தார்.

அவரை போய் பார்த்து புகார் கொடுக்கிறார்கள்.

அந்த புகாரில் நீங்கள் 356ஆவது பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு தகவல் அனுப்பலாமே என்று சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது.

மாநில ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்வதற்கான பிரிவுதான் இது. இது அகற்றப்பட வேண்டும் என்பதுதான் அண்ணா காலத்தில் இருந்தும் கலைஞர்காலத்திலிருந்தும் எடுக்கப்பட்ட நிலைப்பாடு.

இப்பொழுது எதற்காக 356ஐ பயன்படுத்தலாம் என்று சொல்கிறீர்கள்.

35 விழுக்காடு வாக்குகளை பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது. இந்த அரசு சீக்கிரத்தில் கவிழ்ந்துவிடும், ஆறு மாதம் நீடிக்காது என்று சொல்கிறார்கள்.

முதலில் ஆறு மாதம் பொறுமை காப்போம் என்று சொன்னவர் இப்போது இது நீண்ட நாள் நீடிக்காது என்கிறார்.

பாஜகவை மறைமுகமாக இங்கே ஆட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிற விதத்தில் கவர்னர் 356 ஐ பயன்படுத்தலாமே என்று சொல்கிறார்கள். படையெடுத்து சென்று குதிரை பேரம் நடக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்த திமுகவை பார்த்து கேட்கிறேன், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமகிருஷ்ணனை கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய சொன்னதோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மீண்டும் அவரை திமுக வேட்பாளராக அதே தொகுதியில் எம்எல்ஏ ஆக்கினீர்களே. அது என்ன பெருச்சாளி பேரமா?

அதுபோல அனிதா ராதாகிருஷ்ணனையும் அண்ணா திமுகவில் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு பிறகு உங்கள் கட்சியில் சார்பு வேட்பாளராக ஆக்கினீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் வழிகாட்டியாக இருக்கிறீர்கள்’ என்று கூறினார்.

கூட்டணியில் இருக்கும் போது எங்களை எப்படி எல்லாம் நடத்தினீர்கள், ஒதுக்கினீர்கள்… மற்ற கட்சிகளுக்கு சமமாக எங்களையும் நடத்துங்கள் என்று கேட்டோம். அதற்கெல்லாம் இடமில்லை. நான்கு சீட்டு தான் என்று முகத்தில் அறைந்தார் போல் எங்கள் குழுவினரிடம் சொன்னார்கள், என்று குறிப்பிட்ட வைகோ, தற்போதைய அரசு ஊழலை நீக்கி இருக்கிறது. முதலமைச்சர் விஜய் அரசுக்கு எதிராக எதிர் அணியில் இருந்து வீசும் கணைகள் அனைத்திற்கும் மதிமுக கவசமாக இருக்கும்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share