“சந்தர்ப்பவாதிகள்.. துரோகிகள்.. ஓடுகாலிகள்..” – ஆதவ் அர்ஜுனா, விஜயபாஸ்கரை விளாசிய கே.பி. முனுசாமி!

Published On:

| By Pandeeswari Gurusamy

kp Munusamy

அதிமுகவைப் பொறுத்தவரை இங்குள்ள ஒவ்வொரு சாதாரணத் தொண்டனும்தான் ஜாம்பவான். அந்தத் தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இன்று பதவிகளைத் தேடி ஓடியிருக்கும் ஓடுகாலிகள் என கே.பி முனுசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைத்துள்ளார். இந்தச் சூழலில், அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். “அதிமுக – திமுக இடையே நிலவும் கூட்டணி முயற்சியே எங்களது விலகலுக்குக் காரணம்” என பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமாவால் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி இன்று ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஜாம்பவான்கள் எல்லாம் தவெக பக்கம் வந்துவிட்டார்கள், அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் லெட்டர் பேடு கட்சிக்காரர்கள்” என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதிமுகவைப் பொறுத்தவரை இங்குள்ள ஒவ்வொரு சாதாரணத் தொண்டனும்தான் ஜாம்பவான். அந்தத் தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இன்று பதவிகளைத் தேடி ஓடியிருக்கும் இதுபோன்ற ஓடுகாலிகள். இவர்கள் யாரும் ஜாம்பவான்கள் கிடையாது; சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள். உண்மையான ஜாம்பவான்கள் முழுவதுமே இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். லெட்டர் பேடை வைத்து ஏமாற்றும் கூட்டம்தான் அங்கே ஓடியிருக்கிறது” என்றார்.

ஆதவ் அர்ஜுனாவுக்குக் கடுமையான எச்சரிக்கை!

“90 சதவீத அதிமுகவினர் தவெக-விற்கு வரப்போகிறார்கள், ஏற்கனவே 60% பேர் வந்துவிட்டனர், அதிமுகவும் தவெக-வும் ஒன்றுதான்” என்று ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கே.பி. முனுசாமி: “இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘தவெக-வுடன் அதிமுக இணையும்’ என்று ஆதவ் அர்ஜுனா ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அவருக்கு இந்த ஊடகங்களின் வாயிலாக ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இவரைப் போலக் கொள்கை இல்லாமல், வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களுக்கெல்லாம் ஓடுகின்ற ஓடுகாலி அல்ல அதிமுக தொண்டன்.

ADVERTISEMENT

ஆதவ் அர்ஜுனாவுக்கு என்று எந்தத் தனித்தன்மையும் கிடையாது. முதலில் திமுகவில் இருந்தார், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார், அடுத்து எங்களிடமும் (அதிமுக) வந்திருந்தார். இன்று தவெக-விற்குச் சென்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இத்தனை கட்சிகளுக்கு ஓடுகிறார் என்றால் இவருக்கு என்ன கொள்கை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் வரலாறு!

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்த பேரியக்கம். இந்த இயக்கம்தான் பல நூற்றுக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களையும், பல அமைச்சர்களையும் உருவாக்கியது. இன்று தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்திலேயே அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்றால், அதற்கு 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக தலைவர்கள் கொண்டு வந்த தொலைநோக்குத் திட்டங்கள்தான் காரணம்.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, 54 ஆண்டுகால பாரம்பரியத்தோடு, கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட இயக்கம் இது” என்றார். மேலும், “ஆதவ் அர்ஜுனாவிற்கும் விஜயபாஸ்கருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆதவ் அர்ஜுனாவைப் போலத்தான் விஜயபாஸ்கரும். அதிமுக ஆட்சியில் இல்லை என்றவுடன் சுயநலத்திற்காக விஜயபாஸ்கர் அங்கே ஓடிவிட்டார். நாளை அங்கே ஆட்சி இல்லை என்றால், விஜயையும் காலி செய்துவிட்டு இவர்கள் வேறு எங்காவது ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

‘அதிமுக இணையும்’ என்பது போன்ற கருத்துக்களை மீண்டும் சொன்னால், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர் நீதிமன்றத்தில் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும்” என மிகக் கடுமையாக எச்சரித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share