“ஆதவ் அர்ஜுனா சொன்ன கரூர் கணக்கு அதுதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஜூலை 2ம் தேதி தவெகவில் இணைந்த விழா மேடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், “கரூர் மிகவும் முக்கியமான ஊர். அங்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அந்த கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். எங்கள் தலைவரை கரூரில் கை வைத்திருக்கிறீர்கள், எங்கள் மக்கள் மீது கை வைத்துள்ளீர்கள். ஸ்டாலின் அவர்களே, உதயநிதியின் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்கள். அதற்கான பதில் ஒரு நேரத்தில் நடக்கும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

ADVERTISEMENT

திமுக மற்றும் சிபிஐ கண்டனம்:

கரூர் விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் திமுக முடிவு செய்துள்ளது. இதேபோல், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்:

இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ” கணக்கு தீர்க்காமல் என்று அவர் பேசியது கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன ‘கணக்கு’ என்பது அதுதான்.. அதில் பிணக்கு போட கூடாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share