தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா இன்று (ஜூலை 4) ஆளுநர் ஆர்லேகரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்,
இன்று திமுக, அதிமுக, பாஜக என முக்கிய தமிழக அரசியல் கட்சிகள் தவெக அரசு மீது குற்றம்சாட்டி அடுத்தடுத்து புகார் மனுக்களை ஆளுநரிடம் அளித்தன.
இந்தசூழலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான வெங்கட நாராயணாவும் இன்று ஆளுநரைச் சந்தித்து பேசியுள்ளார். மற்ற கட்சித் தலைவர்கள் சந்தித்தது ஏன் என்பதை ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த நிலையில், வெங்கட நாராயணா ஏன் சந்தித்தார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. ”இன்று வெங்கட நாராயணா ஆளுநரை சந்தித்தார்” என்று மட்டும் குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது என்னென்ன விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்த விரிவான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்த கே. வெங்கட நாராயணாவை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து கடந்த ஜூன் 26ஆம் தேதி அரசு அரசாணை வெளியிட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைத் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
