2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 4) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் பலர் கட்சியில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கீதா, கிருஷ்ணராயபுரம் மணிவண்ணன், கரூர் மணிவண்ணன், திமுகவைச் சேர்ந்த வி.பி.கலைராஜன், நிலக்கோட்டை அன்பழகன், உசிலம்பட்டி பாண்டியம்மாள், ஆலந்தூர் திமுகவைச் சேர்ந்த கன்டோன்மெண்ட் சண்முகம், கூடலூர் ஜெயசீலன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபாகரன், பார்த்திபன் மற்றும் பையூர் சந்தானமும், அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் சின்னசாமியும் தவெகவில் இணைந்து கொண்டனர். மேலும் திமுக மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். இவர்களுடன் திரைப்பட இயக்குநர் ரவி மரியா, தயாரிப்பாளர் பஷீர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையே இன்று பிற்பகலில் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசியவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
