வைஃபை ஆன் செய்ததும், “சேருது பாரு ஒரு புதிய பாதை, மாறப்போகுது இனி நம்ம கதை”ன்னு ராகம் போட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. மாஜி திமுக கூட்டணி கட்சிகளோட ‘புதிய பாதை’யா?
யெஸ் ப்ரோ.. கோவளத்துல நேத்து தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை சிஎம் விஜய் நடத்தி இருந்தார் இல்லையா? அந்த கூட்டத்துக்கு போயிட்டு வந்த லீடர்ஸ் இன்னமும் அதை பத்தி சிலாகிச்சுகிட்டுதான் இருக்காங்களாம்..
கோவளம் கூட்டத்துல என்ன நடந்துச்சுன்னு அதுல கலந்துகிட்டவங்ககிட்ட கேட்டப்ப, “முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளோட லீடர்ஸ் மட்டும் இல்லாம அவங்களோட கட்சி முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தாங்க.. காங்கிரஸில்தான் மாணிக்கம் தாகூர், ப.சிதம்பரம், அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன், ஜோதிமணி எம்பின்னு ஏகப்பட்ட பேர் அட்டெண்ட் பண்ணியிருந்தாங்க..

இந்த கூட்டத்தை சிஎம் விஜய் 2 செக்மெண்ட்டா நடத்தினாரு.. முதல்ல, கட்சி லீடர்ஸ், கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் ஒன்னா உட்கார வெச்சு ஒரு மீட்டிங்.. அதுக்கு அப்புறமா கட்சி லீடர்ஸ் கூட மட்டும் ஒரு மீட்டிங்குனு நடத்தினார் சிஎம் விஜய்..
எல்லாருமே கலந்துகிட்ட பொது டிஸ்கஷனில்ல முதல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன்தான் பேசுனாரு.. அவரு பேசுனதை அப்படியே வழிமொழிஞ்ச மாதிரி மத்தவங்களும் பேசுனாங்க.

காதர் மொகிதீன் பேசும்போது, “தமிழக அரசியல் வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையில முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில இடம் கொடுத்திருக்கீங்க.. இதை என்னைக்கும் முஸ்லிம்கள் மறக்கமாட்டாங்க.. மக்களும் கடவுளும் உங்க பக்கம்தான் இருக்காங்க.. உங்களோட நல்லாட்சி தொடர்ந்து நடக்கனும்” பாராட்டுகளை குவிச்சுட்டாரு.. அதுக்கு அப்புறமா, ”UPA” அப்படிங்கிற மாதிரி கூட்டணிக்கு நல்ல பேரு வைக்கனும்.. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேவை, குறைந்தபட்ச செயல் திட்டம் மாதிரி ஒன்னை உருவாக்கனும்.. மாவட்டங்கள் தோறும் இந்த கூட்டணிக்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கனும்” என லிஸ்ட் போட்டு ஆலோசனை கொடுத்தார்.

அவருக்கு அப்புறமா பேசுன வைகோ, காதர் மொகிதீனைவிட ரொம்பவே சிஎம் விஜய்யை புகழ்ந்து தள்ளிட்டாரு.. வைகோ பேசும்போது, போன திமுக ஆட்சியில கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்தான்.. நீங்கதான், “தொட்டா விட மாட்டேன்; தொட்டவங்களையும் விட மாட்டேன்”ன்னு பிராமிஸ் செஞ்சிருக்கீங்க.. அதனால போன திமுக கவர்மெண்ட்ல ‘தொட்டவங்க’ யாரையும் விட்டுடாதீங்க.. கடுமையா நடவடிக்கை எடுங்க..”ன்னு காட்டமா சொன்னார்.. அதோட, “உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள் மூலமா தலைவர்களை/ மேயர்களை தேர்ந்தெடுக்கிற முறைக்கு முடிவு கட்டு நேரடி தேர்தலை நடத்துற முடிவை எடுக்கனும்”னு சிஎம் விஜய்க்கு டிமாண்ட் வெச்சாரு வைகோ.

திருமாவளவன் பேசுறப்ப, “2010-ல் இருந்தே விசிக, கூட்டணி ஆட்சி அப்படிங்கிறதை வலியுறுத்து.. அதுக்கு முன்னாடி 2006-ல் கூட்டணி ஆட்சிக்கான சான்ஸ் இருந்துச்சு.. ஆனா அன்னைக்கு அது ஒற்றையாட்சியாகவே இருந்தது.. இப்ப உங்க மூலமா கூட்டணி ஆட்சி, கூட்டணி அமைச்சரவைன்னு உருவாகி இருக்கிறது.. இனிமேல் எலக்ஷன்ல யார் ஜெயிச்சாலுமே தமிழ்நாட்டுல கூட்டணி ஆட்சிதான் அப்படிங்கிறதுக்கு இதுதான் தொடக்க புள்ளி.. அதை நீங்கதான் செஞ்சு இருக்கீங்க..”ன்னு அவர் பங்குக்கு பாராட்டினார்..
பொதுவாக எல்லாருமே, “லஞ்சம் இல்லாத அரசாங்கமா இருக்கு.. நேர்மையான அரசாங்கமா இருக்கு.. மக்கள் இந்த அரசாங்கத்தைத்தான் விரும்புறாங்க.. இதே மாதிரி ஆட்சியை தொடர்ந்து நடத்தனும்” அப்படின்னு பாராட்டி தள்ளிட்டாங்க.

சிஎம் விஜய் பேசுறப்ப, “ஆட்சி கவிழ்ந்துரும்.. 3 மாசத்துல தேர்தல் வரும்,.. 6 மாசத்துல தேர்தல் வரும்னு பேசிகிட்டு இருக்காங்க.. அதெல்லாம் நடக்காது.. இந்த ஆட்சி 5 வருஷம் தொடர்ந்து இருக்கும்.. அதுக்கு அப்புறமாகவும் நம்ம ஆட்சிதான் நீடிக்கும்.. நம்மைப் பொறுத்தவரைக்கும் மதச்சார்பின்மை, சமூக நீதிதான் முக்கியம்.. அதை நம்ம அரசு கடைபிடிக்கும். நாம நம்ம கூட்டணியை வலிமைப்படுத்தனும்.. இன்னைக்கு லெப்ட் பார்ட்டீஸ் வரலைதான்.. ஆனா அவங்களும் வருவாங்க.. மேலும் சில கட்சிகளும் நம்ம கூட்டணிக்குள்ள வருவாங்க.. வரப்போற பை எலக்ஷன்ல எல்லாருமே சேர்ந்து நம்ம கூட்டணியை ஜெயிக்க வைக்கனும்”ன்னு கேட்டுகிட்டாரு..

இதுக்கு அப்புறமா கட்சி தலைவர்களோட சிஎம் விஜய் தனியா பேசினார்.. அப்ப, “கூட்டணிக்கான பெயரை யோசிச்சு வெச்சிருக்கேன்.. அதை பத்தி நாம அடுத்த மீட்டிங்கில பேசுவோம்”ன்னு கேசுவலா சொன்னார்..
அதே மாதிரி, போன திமுக கவர்மெண்ட்டுல நடந்த சில மோசமான சம்பவங்களையும் சிஎம் விஜய்கிட்ட இந்த லீடர்ஸ் ஷேர் செஞ்சாங்க..
இந்த கூட்டம் ரொம்பவே கேசுவலா, ஜாலியா, நலம் விசாரிக்கிற மீட்டிங் மாதிரிதான் இருந்துச்சு…ரொம்பவே எமோசனலா எல்லாம் இல்லைன்னு சொல்லலாம்” அப்படிங்கிறாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
