எம்.எல்.ஏகளை பணம் கொடுத்து வாங்குவது குதிரை பேரம் , அதுதான் ஹார்ஸ் டிரேடிங். எம்.எல்.ஏ கள் சுயமாக வேறு கட்சிக்கு செல்வது இது ஹார்ஸ் ரேசிங் என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 2) காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு செல்வது குறித்த கேள்விக்கு, “இது தவெக- அதிமுக அவர்கள் கட்சிக்குள் நடைபெறும் விஷயம்.
ஏதாவது தவறு நடந்தால் அப்பொழுது நாங்கள் பேசுவோம். இப்பொழுது நாங்கள் பேசுவது சரியாக இருக்காது.
அதிமுக எம்.பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் எந்த அடிப்படையில் மனு கொடுத்து உள்ளார். எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது.
எம்.எல்.ஏ கள் சொந்தமாக சுயமாக முடிவெடுத்து வேற கட்சிக்கு செல்கின்றனர். நேற்று யார் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தவெக எம்எல்ஏ வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போட சொல்லியதாக வழக்கு போட்டு இருக்கின்றனர்.
பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம் , அதுதான் ஹார்ஸ் டிரேடிங். பணம் கொடுப்பதாக சொல்வதே தவறு, சட்டப்படி இந்த பேச்சு எடுத்தாலே தவறு. ஆனால் எம்.எல்.ஏகள் சுயமாக வேறு கட்சிக்கு போகின்றனர் ,இது ஹார்ஸ் ரேசிங்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இந்த 50 நாட்களில் யாரை கேட்டாலும் ஊழல் குறைந்து இருக்கிறது என்கின்றனர். அரசு அலுவலகங்களில் வேலை விரைவாக நடக்கிறது.50 நாட்களில் இது எவ்வளவு பெரிய புரட்சி. அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து இருக்கின்றது என்பது தவறு எனவும், இதுவரை என்ன நடந்து கொண்டிருந்ததோ அது அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.
சிங்கப் பெண் திட்டத்தை பொறுத்தவரை அதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அமல்படுத்தவே நேரம் ஆகும். 5 ஆண்டுகளில் நடந்ததை 50 நாட்களில் ஒப்பிடுவது சரியாக இருக்காது. 50 நாட்களிலேயே லஞ்சத்தை ஒழித்து இருப்பது ஆச்சரியமானது என்றார்.
கல்லா பெட்டி கூட்டணி இப்போது தவெக வசம் சென்றது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருக்கிறது, நேற்று நடந்த தேநீர் விருந்தில் கூட்டணி கட்சியினருக்கு முதல்வர் விஜய் மரியாதையும் மதிப்பும் அளித்தார். 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது . இந்த 50 நாட்களில் சிறப்பான துவக்கம் நடந்துள்ளது” என்றார்.
