அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ”எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்கள். கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி 30 கோடி ரூபாய் செலவு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இனி 300 ரூபாய் கூட இந்த தொகுதியில் சம்பாதிக்க முடியாது. அதற்கு விடமாட்டோம். இந்த முறையும் ஸ்டாலின் வந்து விடுவார்… அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
இப்படித்தான் ஏற்கனவே ஒருவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் இப்போது எங்களிடம் வந்து விட்டார். இவரை சீக்கிரமே நாங்கள் ராஜினாமா செய்ய வைப்போம்.
மக்கள் சார்ந்த பிரச்சனையை நீங்கள் கையில் எடுக்கவில்லை என்றால், உங்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள்’ என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் இன்று (ஜூலை 4) செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி, ‘தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான பாலசுப்பிரமணியன் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைப்போம் என மிரட்டல் தொனியில் பேசுவது போல தோன்றுகிறது. அவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
நேற்று அனிதா அண்ணன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரும் என்னை இதுபோல மிரட்டுகிறார்கள்…பேரம் பேசுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
நான் திமுகவைச் சேர்ந்தவன். எதற்கும் அஞ்சுபவன் கிடையாது. எனக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசிய பாலசுப்ரமணியன் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ’நாகர்கோயிலில் வெற்றி பெற்ற ஆஸ்டின், வேப்பனஹள்ளி எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோரிடமும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் பேரம் பேசி இருக்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
தமிழக வெற்றிக்கழக அரசு குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடமும் புகார் அளித்திருந்தார்.
முன்னதாக ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜா, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் 35 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
