தவெக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
அவதூறு வழக்கில் நேற்று (ஜூலை 4) கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காவல்துறை மூலம் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லி நிர்பந்திக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தசூழலில் சென்னை லோக் பவனுக்கு சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து தவெக அரசு மீது புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ”தமிழ்நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற குதிரைபேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைக் குறித்து ஆளுநரிடத்திலே நேரடியாக விளக்கினோம்.
1ஆம் தேதி அன்றே அரசுக்கு தொடர்பில்லாத இரண்டு பேர், அதாவது ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக எல்லா கூட்டங்களிலும் — அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து மற்ற அரசியல் அரசு உயர்மட்டக் கூட்டங்களிலும் அமர்ந்து முதலமைச்சர் முன்னிலையிலே அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிற ஒரு கேவலமான நிலைமை தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து ஏற்கனவே ஆளுநரிடம் 1ஆம் தேதி மனு கொடுத்தோம். அவர் அன்றைக்கு ஊரிலே இல்லாத காரணத்தினால் இன்றைக்கு அதை வலியுறுத்திச் சொன்னோம்.
ஆளுநர் அதை மிகவும் கூர்மையாகக் கேட்டுக்கொண்டார். அதோடு மட்டுமல்ல, அவர் சொன்ன ஒரு வாசகம் எங்களுக்கெல்லாம் மிக… மிக மகிழ்ச்சியாக இருந்தது.
‘அந்த இரண்டு பேர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று நாங்கள் கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
‘அப்படி அவர்கள் அவசியமாக அந்த கூட்டங்களிலே கலந்துகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் இரண்டு பேரையும் முதலமைச்சர் அமைச்சராக்கி கொள்ள வேண்டியதுதானே என அவராகவே சொன்னார்.
ஆகவே, இது குறித்து ஒரு உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இது தவறு என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். இந்த ஆட்சியில் நடைபெறுவது தவறானதுதான் என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்கிற அளவுக்கு அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
அதேபோல, குதிரைபேரத்தினுடைய உச்சமாக நேற்றைய தினம் அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதுவரைக்கும் அவதூறு வழக்கில் கைது செய்வதே கிடையாது. நான் நேற்றேகூட சொன்னேன், கடந்தகால ஆட்சியிலே என் மீதே 16 வழக்கு இருந்தது. தளபதி மீது 40 வழக்கு இருந்தது. இங்க இருக்கிற வில்சனைப் போன்றவர்கள் எல்லாம் அன்றைக்கு அந்த வழக்கிலே ஆஜரானார்கள். ஆனால் நாங்கள் கைது செய்யப்படவில்லை.
நேற்றைக்கு ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த, இரண்டு முறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
அவதூறு வழக்கில் போலீஸ் கஸ்டடி எடுக்க மாட்டார்கள். விசாரணை தேவை கிடையாது.
காரணம், பேசியது பத்திரிகைகளில் வந்துவிடும். அதை வைத்து ஃப்ரூப் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். இதுதான் வழக்கமான நடவடிக்கை.
ஆனால், அவரைக் திருச்செந்தூரில் கைது செய்து தூத்துக்குடிக்குக் கொண்டுபோய் உட்காரவைத்து, ஐந்து மணிநேரம் போலீஸ் அதிகாரிகள் அவரைத் துன்புறுத்தி, ‘ஏன் சார் இந்த கஷ்டம்லாம் உங்களுக்கு? பேசாம தவெக-வுக்கு வந்து சேர்ந்துட்டீங்கனா எல்லாம், சரியாயிடும்’ என்று சொல்லி, அவரை பயமுறுத்தி தவெக-வில் சேர்ப்பதற்கு அவரை வற்புறுத்தியிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக அவரே நேற்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.
அதேபோல, திமுக-வினுடைய அமைப்புத் துணைச் செயலாளராக இருக்கிற ஆஸ்டின் நாகர் கோயிலில் வெற்றி பெற்றார். அவரும் ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருந்தவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை இன்ஃப்ளூயன்ஸ் செய்து ‘இவ்வளவு அனுபவம் உள்ளவங்களுக்கு என்ன மந்திரி போர்ட்ஃபோலியோ கேட்கிறீங்களோ, அதைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடைய கட்சிக்கு வாருங்கள், ராஜினாமா செய்துவிட்டு வாங்கள். விஜயே வந்து உங்களுக்குப் பிரச்சாரம் செய்வார். நீங்கள் என்ன இலாகாவைக் கேட்கிறீர்களோ அந்த இலாகாவைக் கொடுக்கலாம்’ என்று ஆஃபர் செய்கிறார்கள். இதையெல்லாம் யோக்கியமாக, நாணயமாகஅவர்கள் மறுக்க வேண்டும், ஆதாரத்தோடு நாங்கள் நிக்கிறோம்.
அதேபோல வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீநிவாசன்… இளைஞரணியைச் சேர்ந்த அவர் இப்போதுதான் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். அவரிடம் 50 கோடி ரூபாய் தருகிறோம் வருகிறீர்களா என்று பேசியிருக்கிறார்கள்.
அதுபோன்று நேற்று தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியனிடம் இங்கே வந்துவிட்டால் மந்திரி பதவி கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்கள்.
ஆக, ஆள் பிடிப்பதற்காகவே இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய, ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதைத் தெளிவாக ஆளுநரிடத்தில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ”காவல்துறை இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை சட்டவிரோதமாகக் கைது செய்தல், காவலில் வைத்து கட்டாயப்படுத்துதல் மற்றும் கட்சி மாறத் தூண்டுதல் போன்ற செயல்கள் குறித்து தங்களது கடுமையான கவலைகளைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த மனுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்ட தூண்டுதல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு நடைமுறைகளில் சம்பந்தமில்லாத நபர்கள் பங்கேற்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக உடனடி அரசியலமைப்புத் தலையீடு, சுதந்திரமான விசாரணை மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
