அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஜூலை 3ம் தேதி கைது செய்யப்பட்டு அன்று இரவே, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத்தொகையான பத்தாயிரம் ரூபாயைச் செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சென்ற அவர் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அய்யாவின் பிள்ளையாக இருக்கக்கூடிய என்னைத் தேவையில்லாத ஒரு வழக்கில் எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற வகையில் இந்த அரசாங்கம் நடவடிக்கையை எடுத்தது. ஆனால் அய்யாவின் அருளால் அதை வென்று இருக்கிறேன்.
அந்த வகையில் இன்றைக்கு அய்யாவை வணங்க வந்துள்ளேன். இதற்கெல்லாம் ஒரு முடிவு காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாராயணனை வணங்கி வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
உங்களைக் குறி வைப்பதற்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
என்னைக் குறி வைப்பதற்கு திமுகவில் யாரும் வேகமாக வேலை செய்யக்கூடாது. வேலை செய்கிறவர்களை எந்த வகையிலாவது மடக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு அரசாங்கம் இன்றைக்கு இருக்கிறது.
நான் ஒரு வியாபார குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் என்னை பார்த்து ஒரு அமைச்சர் ரவுடி என்கிறார். ரவுடியை நாங்கள் சேர்க்க மாட்டோம் என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுகிறார். இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு அருள் புரிய வேண்டும் என்று அய்யா நாராயணனை வணங்கி வந்திருக்கிறேன்.
தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கு உங்களிடம் வற்புறுத்தினார்கள் என்றும் நீங்கள் முடியாது என்று சொல்லிவிட்டீர்கள் என்றும் நேற்று கூறியிருந்தீர்களே?
நடந்த உண்மைகளை, என்னை அழைத்துச் செல்லும் போது விவரமாகச் சொன்னேன். எந்த வகையிலாவது எங்களை எல்லாம் உடனடியாக ராஜினாமா செய்து, அந்தக் கட்சியில் சேர்ந்தால் எல்லா நிலைகளிலும் உயர்வைத் தருகிறோம் என்ற வகையில் அழுத்தங்களைக் கொடுத்தார்கள்.
இதற்கெல்லாம் திமுக தொண்டனாக இருக்கக்கூடிய யாரும் அசைய மாட்டார்கள். அப்படி அசைகிறார்கள் என்றால் திமுகவின் தொண்டனாக இருக்க மாட்டார்கள்.
போலீசார் கட்சிக்காரர்கள் மாதிரி செயல்பட்டார்களா?
உண்மைதான்… அதனால்தான் எஸ்பி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பொழுது முழு விவரத்தையும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தேன் என்று கூறினார்.
