தமிழ்நாட்டு அரசியல் வீழ்ச்சி: தரமிழக்கும் சட்டமன்றம், தடுமாறும் பொதுமன்றம், தறிகெட்டுச் செல்லும் தவெக ஆட்சி அலங்கோலங்கள்!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

TVKs chaotic governance

ராஜன் குறை

கடந்த ஐந்தாண்டுகளாக டில்லி உள்ளிட்ட இந்திய பெருநகரங்களில், முற்போக்கான, முதிர்ச்சியுள்ள அரசியல் பார்வையாளர்களிடையே, ஊக்கமிக்க இளைஞர்களிடையே பேசும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து அவர்கள் கூறும் வசனம் ஒன்று இருந்தது: “உங்களுக்கு என்ன, ஸ்டாலின் இருக்கிறார்!” என்பதுதான் அது.

ஏனெனில் ஒன்றிய அரசிலும் சரி, பாஜக ஆளும் மாநிலங்களிலும் சரி நடக்கும் அரசியல் நாகரீகமற்ற, பண்பாட்டு முதுற்சியற்ற, நெறிகளுக்கு புறம்பான செயல்களை பார்க்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க ஆட்சி உண்மையிலேயே அவர்களுக்கு ஏக்கப் பெருமூச்சை வரவழைப்பதாக இருந்தது. ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டு அரசு மக்களாட்சியின் மாண்பை உயர்த்துவதாக இருந்தது. மக்கள் நலத்திட்டங்களும், பொருளாதார வளர்ச்சியும், கல்வி, அறிவுப்புல மறுமலர்ச்சியும் இணைந்து நடப்பதாக இருந்தது. அதனால்தான் பிற மாநிலங்களில் உள்ள முற்போக்காளர்கள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகப் பார்த்தார்கள். பாஜக வெறுப்பரசியல் அலையை தடுக்கும் அரணாகப் பார்த்தார்கள்.  

ADVERTISEMENT

அதற்கு முற்றிலும் மாறாக மற்றொரு சாரார் எப்போதும் இருப்பார்கள். அது “இந்து-இந்தி-இந்தியா” என்ற கருத்தியலை ஏற்கும் அணி. பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தினை உயர்த்திப்பிடிக்கும் அணி. பல்வேறு கட்சிகளிலும் இதற்கான ஆட்கள் இருப்பார்கள். தி.மு.க என்றுமே ஆபத்து; நெருப்பு. நெருப்பை அணைக்க வேண்டுமானால் சாக்கடை ஜலத்தைக் கூட எடுத்து வீசலாம் என்பதுதான் அவர்கள் கொள்கை. ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் பாலமாக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தியின் நேர்காணலை துக்ளக் பத்திரிகை வெளியிட்டிருப்பதைக் காணலாம்.

சங்கிகளின் செயல்முறை  தி.மு.க-விற்கு எதிராக மக்களிடையே ஓயாமல் வதந்திகளைப் பரப்புவதுதான். அது இந்து மதத்திற்கு எதிரானது என்பார்கள்; கோயில்களை இடிக்கிறார்கள் என்பார்கள்; இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்பார்கள்; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று பெரும் கட்டுக்கதைகளை பரப்புவார்கள்; தி.மு.க தலித் சமூகத்தினருக்கு எதிரானது. அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ஒரு சாரார் ஒரு தலைபட்சமான கருத்துக்களை பிரசாரம் செய்வார்கள். மற்றும் சிலர் தமிழ் தேசியத்தை வீணாக்கிவிட்ட து என்று சொல்லி பிளவுவாத சிந்தனைகளைத் தூண்டுவார்கள். இவை எல்லாவற்றிற்கும் இந்திய பெருந்தேசிய நல்லாசி கிடைக்கும். எப்படியாவது தி.மு.க ஆட்சி தொடரக்கூடாது. அந்த கட்சி பலவீனமடைய வேண்டும். அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

ADVERTISEMENT

வெகுஜன மனநிலை என்பது எப்போதுமே பிளவுபட்டது. அது ஒரு வகையில் என்னதான் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், நிலைபட்ட சமூக அமைப்பின் பாதுகாப்பை விரும்பக்கூடிய பிற்போக்கு மன நிலை இருக்கும். சமூக மாற்றம் வேண்டும் என்று நினைக்கும்; ஆனால் நிலைத்தன்மைக்கும் ஏங்கும். அதுதான் தி.மு.க எதிர்ப்பாளர்களின் பெரும்பலம். தி.மு.க அரசியல் என்றுமே எதிர்நீச்சல் அரசியலாக இருக்க வேண்டிய சூழ்நிலை.

இதை நன்றாகப் புரிந்த தி.மு.க எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் முதல் வேலையாக மாங்காடு, மூகாம்பிகை என்று கோயில்களுக்கு செல்வார்கள். அது பக்தி என்று கூறப்படும்; ஆனால் மக்கள் அதை பிற்போக்கு நிலைத்தன்மையின் குறியீடாக புரிந்துகொள்வார்கள். காலம் காலமாக, தெய்வங்கள், பூசாரி வர்க்கம், மன்னர்கள் என்ற அரசமைப்பு உளவியலின் தொடர்ச்சி, பழமைவாத ஏக்கம் இதில் செயல்படுவது தி.மு.க எதிர்ப்புக்கு வலுச்சேர்க்கும்.

ADVERTISEMENT
TVKs chaotic governance

அரை நூற்றாண்டுக்காலம் தி.மு.க-வை வழிநடத்திய கலைஞர் வைணைவ சீலர் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றினையே தொலைகாட்சித் தொடராக எழுதி, அவரது ஜாதி வேற்றுமைக்கு எதிரான முற்போக்கு சிந்தனையை பாராட்டினாலும் தனிப்பட்ட முறையில் மத வழிபாட்டை மேற்கொண்டதில்லை. அந்த வழியிலேயே ஸ்டாலினும் பயணிக்கிறார். இந்த தலைமைப் பண்பு இந்துத்துவ கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிரான சமரசமற்ற நிலைபாட்டை உணர்த்துவதாக இருக்கிறது. தனிப்பட்ட கடவுள் பக்தி வேறு, மத அடையாளவாதம் வேறு என்றாலும், தலைவர்கள் பகுத்தறிவு சார்ந்தவர்களாக இருப்பது பொதுவெளியில் மதச்சார்பின்மையை வலுப்படுத்துகிறது.

இவையெல்லாம் இணைந்துதான் திடீரென நடிகர் விஜய் 107 தொகுதிகளில் நிறுத்திய திடீர், குபீர் வேட்பாளர்கள் அவர் முகத்தால் வெற்றிபெற்று, இப்போது ஒரு கூட்டணி அரசொன்று அமைந்துள்ளது. பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு ஆளுனர் ஆட்சி என்ற மறைமுக பாஜக ஆட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று சொல்லி தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், வி.சி.க, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இப்போது த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. ம.தி.மு.க தலைவர் வைகோவும் விஜயை சந்தித்துப் பேசி விட்டு, தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இரண்டு முக்கியமான கேள்விகள் எழுகின்றன. ஒன்று, விஜய் உண்மையிலேயே பாஜக எதிர்ப்பாளர் என்று கருதி தி.மு.க தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் விஜய் அரசின் அலங்கோலங்கள் மீதான விமர்சனங்களுக்கு பொதுமன்றத்தில் தடுப்பரண் அமைத்து செயல்படுவது சரியா? இரண்டு, ஆளுனர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக விஜய் அரசு தமிழ்நாட்டு நலன் களை சீர்குலைப்பதை வேடிக்கை பார்க்க முடியுமா?

TVKs chaotic governance

விஜயின் பாஜக எதிர்ப்பின் போலித்தனம்

ஜோசப் விஜய் பாஜக ஆதரவாளர் கிடையாது என்று பலரும் கருதுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை அமைச்சரவையில் இணைத்துள்ளார், ராகுல் காந்தியை பதவியேற்பு விழாவிற்கு அழைத்தார், கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களுக்குச் சென்று ஆதரவு கேட்டார், ஏன் பெரியார் திடலுக்குக் கூடச் சென்றார் ஆகியவை காரணங்கள். ஆனால் காங்கிரஸ், தி.மு.க பிரிவது பாஜக-விற்கு எவ்வளவு பெரிய ஆதாயம் என்பதை யாரும் பேசுவதில்லை. இந்தியா கூட்டணியில் கடுமையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 2029 தேர்தலிலும் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டுமானால் காங்கிரஸும், மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இயலும். அவ்வாறாக செயல்பட காங்கிரஸ் மீது மாநில கட்சிகள் நம்பிக்கை வைக்கவேண்டும். தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டுவிட்டு தவெக ஆதரவாக மாறியுள்ளது காங்கிரஸின் நம்பகத்தன்மையை பெருமளவு பாதித்துள்ளது. அதன் மூலம் பாஜக-விற்கு பெரியதொரு நன்மையை செய்துள்ளார் விஜய்.

TVKs chaotic governance

த.வெ.க, காங்கிரஸ் கூட்டணி உண்மையிலேயே காங்கிரஸை பலப்படுத்தும் என்றால் பாஜக எவ்வளவு பதட்டம் அடைந்திருக்க வேண்டும்? எங்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் முக்கியமல்ல, 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியம் என்று அறிவித்த பாஜக எதனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது? ஐந்தாண்டுகளாக இல்லாத அதிசயமாக ஆளுனர் ஏன் முழு ஒத்துழைப்புத் தந்து சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்? ஏன் விசிக அமைச்சர் வன்னி அரசு பாஜக-வை விமர்சித்துப் பேசும்போது அவைத்தலைவர் அவசரமாகக் குறுக்கிடுகிறார்? கொள்கை எதிரி, பாசிச பாஜக-வை விமர்சித்தால் என்ன?

இதற்கெல்லாம் பின்னணியில் ஒரு விடை தெரியாத கேள்வி இருக்கிறது. சிபிஐ கரூர் நெரிசல் மரணம் குறித்த விசாரணையில் என்ன செய்துகொண்டிருக்கிறது? ஏன் தேர்தலுக்கு முன் இரண்டு முறை விஜய் டில்லிக்கு அழைக்கப்பட்டார்? ஏன் இரண்டாவது முறை சி.பி.ஐ அலுவலக வளாகத்திலிருந்தே வெற்றிக் குறி காட்டியபடி பவனிவர அனுமதிக்கப்பட்டார்? அந்த விசாரணையின் முடிவுகள் ஏன் இன்னும் வெளியாகவில்லை? இன்னும் எத்தனை மாதங்கள் அதற்குத் தேவை? அந்த விசாரணையைக் கண்காணிக்க அமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி என்ன செய்கிறார்? இறந்துபோன அந்த 41 உயிர்களுக்கு நியாயம் வழங்குவது யார்? மக்கள் பொது இடங்களில் பாஜக விஜயை கட்டுப்படுத்த அந்த விசாரணையை பயன்படுத்துகிறது என்று பேசுகிறார்கள். இதுதான் சட்டத்தின் ஆட்சியா?

விஜய் எந்த பிரச்சினை குறித்தும் பொதுவெளியில் பேசாமல், அறிக்கைகள் விடாமல் இருப்பதன் மர்மம் என்ன? ஊடகங்களை ஏன் சந்திப்பதில்லை? கொள்கை எதிரி குறித்து எதுவுமே பேசாமல் எப்படி தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெறுவார்? கொள்கை எதிரிகள் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்களே? அது குறித்து அவருக்கு கவலை இல்லையா?

ஒரு யூடியூப் சேனலில் ராகுல் காந்தி-ஜோசப் விஜய் இணைப்புப் பாலம் பிரவீன் சக்ரவர்த்தியின் நேர்காணல் ஒன்று மிகவும் சுவாரசியமாக இருக்கும். அது வடிவேலு நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்துவதாக இருக்கும். அந்த காட்சியில் போலீஸால் துரத்தப்படும் திருடன் ஒருவன் வடிவேலுவிடம் “என்னை போலீஸ் துரத்திக்கொண்டு வருகிறார்கள். நான் உங்களிடம் என்ன சொன்னேன் என்று கேட்பார்கள். ஒன்னும் சொல்லீடாதீங்க” என்று கூறிவிட்டு ஆற்றில் குதித்துவிடுவான். போலீஸ் வடிவேலுவிடம் அவன் என்ன சொன்னான் என்று கேட்கும்போது வடிவேலு அவன் சொன்னதைக் கூறுவார். போலீஸ் அவன் சொன்னதைக் கேட்காதே, அவன் என்ன சொன்னான் என்று சொல் என்று கேட்பார்கள். வடிவேலு அவன் அதைத்தான் சார் சொன்னான் என்று கூறுவார். போலீஸ் என்னத்தை சொல்லிடாதீங்க என்று சொன்னான் அதைச்சொல் என்று கேட்பார்கள். வடிவேலு மீண்டும் மீண்டும் சொல்லிடாதீங்க என்றுதான் சொன்னான் என்று சொல்லி அடிவாங்குவார்.

அதுபோல, நேர்காணல் செய்பவர் பிரவீன் சக்ரவர்த்தியிடம் பாஜக கொள்கை எதிரி என்று அவர் எப்படி சொல்கிறார் என்று கேட்பார். பிரவீன் சக்ரவர்த்தி அவர்தான் சொல்கிறாரே என்று சொல்வார். சரி, நீங்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கேட்பார். பிரவீன் சலிக்காமல், அவர்தான் கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டாரே என்பார். அதை எப்படி நம்புகிறீர்கள் என்றால் மக்களைக் கேளுங்கள், விஜயின் கொள்கை எதிரி யாரென்று, அவர்கள் சொல்வார்கள் என்பார். சரி, நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்றால் நான் எப்படி சொல்லமுடியும் அவர் சொல்கிறார், மக்கள் சொல்கிறார்கள் என்பார். உண்மையிலேயே வடிவேலு காமெடி போல சிரிப்பாக இருக்கும்.

ஜோசப் விஜய் பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று சொன்னதால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த சில கட்சிகள் அவரை ஆதரிக்கின்றன. அவர் ஆட்சிக்கு ஆதரவளிக்கின்றன. அவர்கள் ஆதரவு அளிப்பதுதான் அவர் பாஜகவின் கொள்கை எதிரி என்பதற்கு ஆதாரம். மற்றபடி அவர் நெற்றியில் பொட்டு, தோளில் கோட்டு என்று சபையை அலங்கரித்தால் போதும் என்பதுதான் புரிதலாக இருக்கிறது.

TVKs chaotic governance

தவெக ஆட்சி அலங்கோலங்கள்!

ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொல்லாமல் ஏதேதோ பேசிவிட்டு இறுதியில் நான் ஒரு சைகை செய்யட்டுமா என்று கேட்கிறார். அவைத்தலைவர் “செய்யுங்கள் பிரபுவே!” என்ற வகையில் விநயமாக அனுமதிக்கிறார்.  உடனே ஏதோ கழுத்தை அறுப்பதுபோல ஒரு சைகை செய்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். எட்டு கோடி பேர் வாழும், உலகின் பண்டைய பண்பாட்டைக் கொண்ட மக்களின் சட்டமன்றத்தில் முதல்வர் செய்யும் செயலா இது என்று யாரும் கேட்பதில்லை! அடுத்த முறை முதல்வர் நடனமாடவா என்று கேட்டாலும் கேட்கலாம். ஏற்கனவே அமைச்சர்கள் பள்ளிகளில் குத்தாட்டம் போட்டு ஆட்சியின் மேன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களும் சேர்ந்து சட்டமன்றத்தில் ஆடலாம்.

TVKs chaotic governance

தலைநகர் டில்லியில் தமிழ்நாட்டு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக விஜய் நடித்து சென்சாரால் முடக்கப்பட்ட ஜனநாயகன் படத்தைத் தயாரித்த வெங்கட் நாராயணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை அரசு நிர்வாகத்துடனோ, அரசியலுடனோ எந்த தொடர்பும் கிடையாது. தனியார் கம்பெனிகளை நட த்தியுள்ளார். இப்போது ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் கம்பெனியை நடத்தி வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் எந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக, அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்த்துடன் இயங்க நியமிக்கப்படுகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVKs chaotic governance

ஏற்கனவே அவருடைய மேலாளராக அவருடைய படங்களில் பணிபுரிந்தவரும், தேர்தல் பிரசாரத்திற்காக ரூட் என்ற அமைப்பை நடத்தியவருமான ஜெகதீஷ் பழனிசாமி அவருடைய தனி உதவியாளராக அரசால் நியமிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. இப்படி திரைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்களையே முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவது அரசு நிர்வாகத்தை நடத்த எப்படி உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி உதவியாளராவது அவருடைய தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அரசின் பிரதிநிதியாக டில்லியில் எப்படி அவருடைய திரைப்பட தயாரிப்பாளர் செயல்பட முடியும் என்பது பெரும் வியப்பளிக்கிறது.

TVKs chaotic governance

இன்னொரு அமைச்சர் சரத்குமார் ஐயத்திற்குரிய விதத்தில் செல்பேசியில் கிரெடிட் கார்டால் வெள்ளைப் பொடி ஒன்றை திரட்டி ஐநூறு ரூபாய்த்தாளில் சேர்த்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. அது போதைப்பொருள் என்று பலராலும் கூறப்படுகிறது. சர்ச்சை இப்போது தொலைகாட்சியிலும் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவை அவரே “தக் லைஃப்” என்ற தலைப்புடன் நண்பர்களுக்குப் பகிர்ந்த தாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை வெடித்ததை அடுத்து அவர் குழந்தைக்கு மாத்திரை பொடி செய்து கொடுத்ததாக விளக்கமளித்துள்ளார். ஆனால் மாத்திரையை அப்படி பொடிப்பார்களா, அதற்கு ஏன் தக் லைஃப் என்று பெயர் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப் படுகிறது. ஏற்கனவே வேறு சில அமைச்சர்கள் குடியுடன் தொடர்புபடுத்திய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

புதிய அமைச்சரவைதானே, சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பலரால் கூறப்படுகிறது. இந்த அலங்கோலங்களுக்கெல்லாம் மூல காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் முதல்வர் விஜயின் மெளன விரதம். மக்கள் அவரை நம்பித்தான் வாக்களித்தார்கள். அவரே அப்படித்தான் பிரசாரம் செய்தார். எல்லா தொகுதிகளிலும் நான் தான் போட்டியிடுகிறேன் என்றார். இப்போது மக்கள் அமைச்சர்களைக் குறித்து, சட்ட மன்ற உறுப்பினர்கள் குறித்து கேள்வி எழுப்பும்போது அவர் மெளனம் காக்கிறார்.

வெங்கட் நாராயணாவை ஏன் மாநிலப் பிரதிநிதியாக நியமிக்கிறேன் என்று முதல்வர் விளக்கமளிக்க வேண்டாமா? அவருக்கு அவ்வாறு நியமிக்க அதிகாரம் இருக்கிறது, உரிமை இருக்கிறதா என்றால் அதனை மக்களுக்கு விளக்கச் சொல்லும் கடமையும் இருக்கிறது அல்லவா? இன்றுவரை தமிழ்நாட்டில் மக்களாட்சிதானே தொடர்கிறது. இன்னும் மன்னராட்சி ஆகவில்லையே.

TVKs chaotic governance

ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு ஜாதி அடையாளத்துடன் கூடிய அட்டைகள் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறுகிறார். மூத்த அரசியல்வாதியான அவருக்கு இதில் அடங்கியுள்ள பிரச்சினை தெரியாதா. ஜாதி அடையாளம் சில சமூக நீதி சார்ந்த முன்னுரிமைகளுக்கு தேவைதான். ஆனால் அதற்காக அனைவர் அடையாள அட்டையிலும் அதனை பொறிப்பது எப்படி சரியாக இருக்கும்?

மற்றொருபுறம் முஸ்லீம்களுக்கான பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. இது குறித்து அரசின் நிலைபாடு என்ன என்று முதல்வர் அறிவிக்கவில்லை. அரசு மேல்முறையீடு செய்யும் என்று தெரிகிறது. ஆனால் முதல்வர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது அவசியம் இல்லையா? எவ்வளவு முக்கியமான பிரச்சினையானாலும் மெளனம் மட்டும்தான் அவருடையே எதிர்வினை என்பது அரசின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.

பாஜக-வை விஜய் எதிர்க்கிறார் என்ற நம்பிக்கையில் அவரை ஆதரிக்கும் கட்சிகள், அவருடைய அரசின் அலங்கோலங்களை கண்டிக்க முன்வர வேண்டாமா? அந்த கட்சிகளின் ஆதரவை நம்பாமல்தானே அவர் அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பதவி விலகச் சொல்லி பேசி வருகிறார்? எப்படியாவது இடைத்தேர்தல்கள் மூலம் தனிப் பெரும்பான்மை அடைந்துவிட்டால் பிறகு முற்போக்கு சக்திகள் பேச்சினைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றுதானே அவர் இயங்குகிறார்? எந்த நம்பிக்கையில் அல்லது கனவில் அவர் செயல்பாடுகளை ஆதரித்து தடுப்பரண் அமைக்கின்றன மதச்சாற்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்த கட்சிகள்? இந்த மர்மம்தான் மக்களைக் குழப்புகிறது.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share