பேச்சு, செயல், அரசியல்: முதல்வர் விஜயின் மெளனவிரத மர்மம் விலகுமா?

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

Chief Minister Vijays silence

ராஜன் குறை

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அவர் துறையான உள்துறை சார்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. அவருக்குப் பதில் வேறொரு அமைச்சர் பதில் சொல்கிறார். அவர் உறுப்பினர் கேள்விகளுக்கு பதில் சொல்வது கெளரவக் குறைவு என்று நினைக்கிறாரா, அல்லது அவருக்கு கோர்வையாக பதில் சொல்ல வராதா என்று தெரியவில்லை.

இரண்டுமே விரும்பத்தக்க நிலை அல்ல. பதில் சொல்வது என்பது பொறுப்பேற்பதுதான். எப்படி நிலைமையை மேம்படுத்தலாம் என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்; சற்றே அவகாசம் கொடுங்கள் என்று கூறலாம். கடுமையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று கூறலாம். ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து பரிந்துரைகள் கேட்கப்போகிறேன் என்று கூறலாம்.

ADVERTISEMENT

எதாவது எழுந்து பேசினால்தான் அவர் பொறுப்பேற்கிறார் என்பது உறுதிப்படும். மெளனவிரதம் காப்பது சரியல்ல. முதல்வரிடம்தான் உள்துறை இருக்கும் என்பது மரபு. ஏனெனில் தினசரி உளவுத்துறை அறிக்கைகள் அவருக்குத்தான் அளிக்கப்படும். முதல்வர் நாற்காலி என்பது பதவி அல்ல; பொறுப்பு. அவர் மெளனமாக இருந்தால் வேறு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுகிறது.

இதில் என்ன கூடுதல் சிக்கல் என்றால் தி.மு.க ஆட்சியில் நடந்த குற்றச்செயல்களைக் குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தார். முதல்வருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றெல்லாம் அதிகபட்ச குற்றச்சாட்டுகளை தேவையின்றி தேர்தல் ஆதாயத்துக்காக வீசினார். இப்போது இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிலைமை மேலும் சீரழிகிறது என்றால் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்.

ADVERTISEMENT

அவர் பேசமாட்டார் ; செயலில் காட்டுவார் என்று அபத்தமாகக் கூறுகிறார்கள். செயலில் காட்டுவார் என்றால் அவரே நேரில் சென்று குற்றவாளிகளை பிடித்து தண்டிப்பாரா, அல்லது மாநிலம் முழுவதும் ரோந்து சென்று குற்றச்செயல்களை தடுப்பாரா? அதையெல்லாம் காவல்துறைதான் செய்யும். இவரது பணி அவர்களை மேற்பார்வையிட்டு செயல்பட வைப்பதும், அதற்கு சட்டமன்றத்திலும், பொதுமன்றத்திலும் பொறுப்பேற்பதும்தான். அதாவது கேள்விகளுக்கு பதில் சொல்வது.

விஜய் தேர்தல் பிரசார நேரத்திலேயே பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது, அவர் தோன்றும் பொதுக்கூட்டங்களில் எழுதப்பட்ட தாள்களிலிருந்து படிப்பது, பல செய்திகளை தவறாகச் சொல்வது என்பவையெல்லாம் விமர்சனத்திற்கு உட்பட்டன. கரூர் விபத்திற்குப் பிறகு திருச்சி விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் அழைக்க, அழைக்க திரும்பிப் பார்க்காமல் போனது மறக்க முடியாதது. அவர்களிடம் கரம் கூப்பி என்ன நடந்தது என்று தெரியவில்லை; பெரிய விபத்தாகத் தெரிகிறது. நான் அங்கிருந்தால் பிரச்சினை அதிகமாகலாம் என்பதால் உடனே சென்னை செல்கிறேன். முழு விவரங்கள் கிடைத்த பிறகு பேசுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் எந்த பெரிய பிரச்சினையும் வந்திருக்கப் போவதில்லை. அவர் ஏன் அப்படி செய்தியாளர்களைத் தவிர்க்கிறார் என்பது பெரிய புதிராகவே தொடர்கிறது.

ADVERTISEMENT
Chief Minister Vijays silence

குறைவாகப் பேசுபவர்கள் என்று அறியப்பட்ட நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் கூட செய்தியாளர்களை முற்றிலும் தவிர்த்ததில்லை. நரேந்திர மோடி மட்டுமே பிரதமரானது முதல் அவ்வாறு நடந்து கொள்கிறார். நார்வேயில் அவர் பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து நடந்தது சர்வதேச அளவில் கேள்விக்குள்ளானது. இந்தியாவில் மக்களாட்சிக்கு மரியாதை இவ்வளவுதானா என்று விவாதிக்கப்படுகிறது. மோடி இந்த அம்சத்தில் மிக மோசமான முன்மாதிரி.

இருப்பினும் மோடியைப் பொறுத்தவரை அவர் கார்யகர்த்தாவாக இருந்து களப்பணி செய்து அரசியலில் முன்னேறியவர். அதனால் அவர் பேசாவிட்டாலும் அரசியல் தெரியாது என்று சந்தேகிக்க மாட்டார்கள். சினிமாவிலிருந்து வந்த விஜய் பேசாமல் இருந்தால் அவருக்கு அவர் பணியைச் செய்யும் ஆற்றல் இல்லையோ, அரசியலே புரியவில்லையோ என்ற ஐயம்தான் பலருக்கும் எழுகிறது.

பேச்சும், அரசியலும்

அரசியல்வாதிகள் பேசுவதைப் பற்றி பொதுப்புத்தியில் தவறான கருத்து உருவாகியுள்ளது. அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்; சொல்வது போல செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் மக்கள் அதிருப்தி கொள்வது உண்டு. இது போன்ற விமர்சனங்களின் பிரச்சினை என்னவென்றால் பேசுவதே அரசியலின் முக்கிய செயல்பாடு என்பதை மறந்து போவதுதான். பேசிப் பேசித்தான் மக்களிடையே கருத்துக்களை உருவாக்க முடியும். அந்த பேச்சுக்களைக் கேட்டு ஏற்றுக்கொள்பவர்கள்தான் கட்சியின் தொண்டர்களாக உருவாவார்கள். அவர்களும் பேசுவதற்குக் கற்றுக்கொண்டு மக்களிடையே சென்று பேசுவார்கள்.

உதாரணமாக அரசு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது என்றால் அது ஏன் தேவை என்பதை எடுத்துக்கூறி பேசவேண்டும். அப்போதுதான் அதற்கான ஏற்பு மக்களிடையே உருவாகும். இட ஒதுக்கீடு ஏன் தேவை என்று தொடர்ந்து பேச வேண்டும். தீண்டாமை ஏன் தவறானது என்று ஓயாமல் பேச வேண்டும். ஜாதி ஏற்றத்தாழ்வு பிற்போக்குத்தனமானது என்பதை விடாமல் வலியுறுத்த வேண்டும். சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்னும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் நாட்டுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்று பேச வேண்டும். பேசினால்தான் அவற்றைக் குறித்த புரிதல் அதிகரிக்கும். கருத்தியல் தெளிவு, சமூக கருத்தொப்புமை உருவாகும்.

அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போகலாம். ஆனால் மக்கள் அந்த வாக்குறுதிகளை தங்கள் உரிமையாகக் கருதத் துவங்குவார்கள். அப்போதுதான் அவற்றை காலப்போக்கில் நிறைவேற்றுவதற்கான அழுத்தம் உருவாகும். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் அண்ணா. அது வெறும் வசனமல்ல. கட்சி அணிகள் அனைவருக்கும் அரசியலின் இலட்சியம் என்ன என்பதை புரியவைக்கும் கோட்பாட்டு நெறி.

ஃபிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க சுதந்திர பிரகடனம், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, இந்திய சுதந்திரம் எல்லாமே பெரும் தலைவர்களின் பேச்சாற்றலால் விளைந்ததுதான். எல்லோருமே அலங்காரமாக பேசுவார்கள் என்பதல்ல. ஆனால் உள்ளத்து உணர்ச்சியிலே விளைந்த சொற்களை மக்களிடம் பகிர்வார்கள். அதனால் எழுச்சி கொள்ளும் மக்கள்தான் அவர்களை பின்பற்றுவார்கள். அந்த தலைவர்கள் எதிர்தரப்பினர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விரிவாக பதில் பேசுவார்கள். அப்போதுதான் மக்களுக்கு எது சரி, எது தவறு என்று சீர்தூக்கிப் பார்க்க முடியும்.

Chief Minister Vijays silence

பெரியாரின் பகுத்தறிவுப் புரட்சி என்பது பேச்சினால் மக்களை சிந்திக்க வைத்ததே!

பெரியார் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார், பலவற்றை முன்னெடுத்துள்ளார். பலமுறை சிறை சென்றுள்ளார். எந்த விளைவுகளுக்கும் அஞ்சாத சிங்கம் அவர். ஆனால் அவருடைய போராட்டங்களின் முக்கியமான பகுதி என்பது மறியல் செய்வதோ, சட்டத்தை மீறுவதோ மட்டுமல்ல. அதை ஏன் செய்ய வேண்டும் என்று அவர் செய்யும் சண்டமாருத பிரசாரம்தான் அவருடைய முக்கியமான அரசியல். ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் மூன்று கூட்டங்களில் பேசியுள்ளார். நான்கு மணி நேரம் கூட நிறுத்தாமல் பேசுவார்.

வைக்கம் போராட்டத்தில் அவர் பங்கெடுத்தது என்பது தடை செய்யப்பட்ட வீதிகளில் நடந்தது என்பது மட்டுமல்ல. அவர் ஏன் ஒரு சாராருக்கு கோயிலை ஒட்டிய வீதிகளில் நடக்க தடை விதிப்பது தவறு என்று செய்த பிரசாரமும். போராட்ட த்திற்கு திரட்டிய ஆதரவும்தான் முக்கியமானது. வர்ண தர்ம ஏற்றத்தாழ்விற்கு எதிராகவும், பார்ப்பனீய கருத்தியல், பார்ப்பனர்கள் சமூக மேலாதிக்கம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராகவும் ஐம்பதாண்டுகாலம் அவர் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேசினார். விவாதித்தார். கேள்விகளுக்கு பதில் சொன்னார். சிந்தனையை விதைத்தார். உலக வரலாற்றிலேயே அபூர்வமான பகுத்தறிவுப் புரட்சியை வெகுமக்களிடையே நடத்திக் காண்பித்தார்.

விஜய் பெரியாரை தன் கொள்கைத் தலைவர் என்று சொல்கிறார். அவருடைய கடவுள் மறுப்பை மட்டும் ஏற்கவில்லை. மற்றபடி அவர் கொள்கைகளை ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் தீண்டாமைக்கு எதிராக, பார்ப்பனீய, ஜாதீய சமூக அமைப்புக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவர் பேசுவதில்லை. கவின் என்ற தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டபோது அவர் கண்டித்துப் பேசவில்லை. விஜய் கண்டிக்காததை சுட்டிக்காட்டி திருமாவளவன் கண்டித்துள்ளார். காணொலி இன்றும் காணக்கிடைக்கிறது.

Chief Minister Vijays silence

விஜய்க்கு இருபது வயதுள்ள, அதற்குட்பட்ட இளைஞர்கள் ஆதரவு பெருமளவு இருப்பதாகவே தெரிகிறது. அதுதான் அவர் தேர்தல் வெற்றிக்கும் காரணம் எனப்படுகிறது. அவர்களிடம் அவர் ஜாதீயம் எவ்வளவு தவறென்று, தீண்டாமை எவ்வளவு தவறென்று பேசினால்தானே அந்த சமூகத் தீமைகள் குறையும்? அப்போதுதான் அவர் திரைபிம்பத்திற்கு உள்ள செல்வாக்கு அரசியல் ஆற்றலாக மாறும்? அவர் தப்பித் தவறி கூட அதுபோன்ற கருத்துக்களை பேசுவதில்லை என்பதற்கு என்ன காரணம்? அனைத்து இளைஞர்களையும் கதாநாயக கவர்ச்சி மூலம் மட்டுமே கவர வேண்டும், வேறு எதுவும் பேசி ஒரு சாராரிடம் அந்த ஈர்ப்பை குறைத்துகொள்ளக் கூடாது என்பதுதானே அதற்கான காரணம்? இவ்வளவு மோசடித்தனமான அரசியலை செய்துவிட்டு எட்டு அமைச்சர் பதவிகளை கொடுத்துவிட்டால் போதுமா?

மொழியும் சிந்தனையும்

மனிதர்களின் சிந்தனை சாத்தியமாவதே மொழியினால்தான். மாம்பழம் சாப்பிடுவதை ஒருவர் பிம்பமாகக் கற்பனை செய்யலாம். ஆனால் இரண்டு வாரங்களாக மாம்பழமே சாப்பிடவில்லை என்று மொழியில்தான் சிந்திக்க முடியும். ஒரு கதையின் முதல் வரியிலேயே அந்த அறையில் நாற்காலிகளே இல்லை என்று எழுதலாம். ஆனால் திரையில் பிம்பமாக காலி அறையை காண்பித்தால் எதுவுமே இல்லை என்று பொதுவாகத் தெரியுமே தவிர,  நாற்காலிகளே இல்லை என்பதை குறிப்பாகச் சொல்ல முடியாது. இன்மை, இருப்பு இரண்டையும் வேறுபடுத்தி மொழியில்தான் சிந்திக்க முடியும்.

அதனால் ஒருவர் சிந்திக்கிறார் என்பதை அவர் பேசினால்தான் அறிய முடியும். தலைமைப் பொறுப்பை ஏற்பவர் பேசினால்தான் அவர் எப்படி சிந்திக்கிறார் என்பது அனைவருக்கும் புலனாகும். மெளனமாக இருந்தால் அவர் சிந்திக்கிறாரா இல்லையா என்றே தெரியாது. அப்போது ஒவ்வொருவரும் அவரது எண்ண ஓட்டங்களைக் குறித்து பலவகையாக யூகிக்க நேரும். மேலும், தனிப்பட்ட உரையாடல்களில் மட்டும் பேசிவிட்டு பொதுவெளியில் பேசாமல் இருந்தால் மக்களுக்கு அவர் எண்ணவோட்டங்கள் தெரியாமல் போய்விடும்.

Chief Minister Vijays silence

உரைகளை எழுதி வைத்துக்கொண்டு படிப்பது தவறில்லை. அது கோர்வையாக கருத்துக்களைச் சொல்ல உதவும். ஆனால் அப்படி படித்த பிறகு, கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். உதாரணமாக பல்கலைக்கழக கருத்தரங்கங்களில் உரைகளை எழுதி வைத்துக்கொண்டுதான் பலரும் படிப்பார்கள். குறித்த கால அளவுக்குள் கருத்துக்களை தொகுத்துச் சொல்ல வேண்டுமென்றால் எழுதி வைத்துக்கொண்டுதான் படிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நேரம் ஒதுக்கப்படும். வேறு யாராவது எழுதிக் கொடுத்ததைக் கொண்டுபோய் படிக்க முடியாது.

அதேபோல ஆய்வேட்டை சமர்ப்பித்த பின், அதனை பல்கலைகழகத்துக்கு வெளியேயுள்ள மதிப்பீட்டாளர்களிடம் அனுப்புவார்கள்; அவர்கள் ஒப்புதல் தந்த பிறகுதான் முனைவர் பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் வாங்குவதற்கு முன் இறுதியாக வைவா வோசே (viva voce) என்ற நேர்முகத் தேர்வு இருக்கும். அதில் ஆய்வேட்டை சமர்ப்பித்தவர் பலரது கேள்விகளையும் எதிர்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும். அதாவது ஆய்வாளர்தான் சுயமாக சிந்தித்து எழுதினார் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் அது.

பல்கலைகழகத்தில் ஒரு ஓவிய மாணவர் கூட அவர் ஓவியத்தைக் குறித்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எதனால் அப்படி வரைந்தார் என்று கூறவேண்டும். ஏதோ தோன்றியது, வரைந்தேன் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன தோன்றியது. எதனால் தோன்றியது என்று சில கருத்துக்களைக் கூறினால்தான் அது உளப்பூர்வமாக வரைந்தது என்பதை ஏற்பார்கள்.

மானுட சிந்தனை பேச்சு எல்லாமே செயல்தான்

எல்லா உயிரினங்களுமே செயல்பூர்வமானவைதான். அவை ஜீவிக்கின்றன, இருக்கின்றன என்பதே செயல்தான். ஆனால் விலங்கினங்கள் சிந்திக்கின்றனவா என்று தெரியாது. ஏனெனில் அவற்றின் நரம்பு மண்டலம், அதாவது மூளை, எவ்வளவு நினைவுகளை சேகரிக்கிறது, இருப்பையும், இன்மையையும் வேறுபடுத்திப் பார்க்கிறதா என்று தெரியாது. அதனால் உடல் ரீதியான செயல்பாடுகளில் மட்டுமே தங்களை அவை வெளிப்படுத்திக்கொள்ளும். அதனால் விலங்குகளை செயல்பூர்வமானவை, அனாவசியமாகப் பேசுவதில்லை என்று புகழ முடியாது. மனிதர்களைப் பொறுத்தவரை சிந்தனை, பேச்சு என்பவையே சிறந்த செயல்பாடுகள். மொழியே அவர்களது இருப்பின் தளம்.

மனித உயிரியின் நரம்பு மண்டலம் மிகுந்த வளர்ச்சி பெற்றது. அதனால் ஏராளமான நினைவுகளை சேகரிக்க முடியும். அதனால்தான் மனித மூளையால் பல்வேறு பொருட்களை, நிகழ்வுகளை ஒப்பிட்டு வேறுபடுத்தி சிந்திக்க முடிகிறது. நேற்று காலை மழை பெய்தது, இன்று காலை மழை பெய்யவில்லை என்பதை ஒப்பிடும்போதுதான் மழை எப்படி பெய்கிறது என்ற சிந்தனை பிறக்கும்.

அதனால் சிந்தனை என்ற செயல்பாடே மனிதர்களின் சிறப்பம்சம். அந்த சிந்தனையை பகிர்ந்து கொள்ளத்தான் மொழி இருக்கிறது. சாதாரண மனிதர்கள் கூட சிறப்பாகப் பேசுகிறார்கள்; அவர்கள் சிந்தனையை வெளிப்படுத்துகிறார்கள். அப்படியிருக்கும் போது ஜோசப் விஜய் போன்ற பணக்கார நடிகர்களால் நன்றாகவே மனதில் இருப்பதை இயல்பாகப் பேச முடிய வேண்டும். அப்படி பேசவிடாமல் எது தடுக்கிறது என்பதே புரியாத புதிராக உள்ளது.

பொம்மை அரசரா?

மன்னராட்சி காலத்தில் சில சமயம் அரசர்கள் இறக்கும்போது அவர்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதுதான் இருக்கும். ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தாலும் அவனுக்குத்தான் முடி சூட்ட வேண்டும். நிச்சயம் அவ்வளவு சிறு வயதில் அந்த சிறுவனால் எந்த முடிவுகளும் எடுக்க முடியாது. அதனால் அவனை பொம்மை அரசராக வைத்துவிட்டு அவன் தாயாரோ, தளபதியோ, மந்திரியோ, அனைவரும் சேர்ந்தோதான் ஆட்சிநடத்துவார்கள். அவர்களுக்குள் கடும் அதிகாரப் போட்டி உருவாகும்.

அதே போல அரசருக்கு முதுமையில் நினைவு குழம்பிப் போனாலும், வேறு யாராவது ஒருவரோ, ஒரு சிலரோதான் எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள். ஒரு அலங்காரப் பதுமையாக அரசர் வீற்றிருப்பார். சம்பிரதாயமாக வணக்கம் சொல்வதுடன் அவர் பணி முடிந்துவிடும். அவரைச் சுற்றியும் அதிகாரப்போட்டி, வாரிசுப் போட்டி எல்லாம் நடக்கும்.

Chief Minister Vijays silence

விஜயின் மெளன விரதம் அவர் பிறரால் இயக்கப்படுகிறாரா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு புறம் அவர் நானே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறேன் என்று அறிவித்தார். கர்ணன் படத்தில் இறுதியில் குருஷேத்திர யுத்தத்திற்கு முன் கீதை உபதேசத்திற்குப் பதில் என்.டி.ராமராவ் பாடுவார்: “மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே” என்று பாடுவார். அது போல விஜய் நானே எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறான்  என்றெல்லாம் சொன்னார். அப்படி யாதுமாகி நிற்கும் விஜய் பேசாமல் மெளன விரதம் காத்தால் யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்படும்.

ஏற்கனவே ஒரு இதழ் அவரை ஆதவ் அர்ஜூனாவின் கரங்களிலிருந்து வரும் கயிறுகளால் இயக்கப்படும் பொம்மலாட்ட பொம்மை என்று சித்தரித்துள்ளது. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல வதந்திகள் அதிகமாகும். விஜய் அவராக சிந்தித்து முடிவுகள் எடுக்கிறார். அதிகாரிகளிடம் விவாதிக்கிறார். அமைச்சர்களிடம் விவாதிக்கிறார் என்பதெல்லாம் பொதுக்களத்தில் பகிரப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விஜய் மெளன விரதத்தை கலைக்க வேண்டும். சட்டசபையில் பேச வேண்டும்; ஊடகத்தினரை சந்திக்க வேண்டும். அவரால் சுயமாக பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து சிந்தித்து பேச முடிகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதுவே விஜய்க்கும் நல்லது; பிறருக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களாட்சிக்கும் நல்லது. 

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share