பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி இன்று (ஜூன் 29) பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தலைமையில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.பிரகாஷ் மற்றும் ஈரோடு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அங்காள பரமேஸ்வரி மஹாலிலும் மற்றும் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் உள்ள வசந்தம் நகர், பழங்காநத்தம் ரோடு, ஜி ஆர் டி மஹாலிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் ஜெயேந்திரன் மற்றும் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், புரசைவாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்திட முனைந்தபோது, அதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினரைக் கண்டித்து தி.மு.கவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேயர் பிரியா, மாணவரணி செயலாளர் வீரமணி, தமிழன் பிரசன்னா உள்ளிட்டோரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினரை கண்டித்தும், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
சேலம் மத்திய மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் இராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக மாணவரணியினர் திரண்டனர். அப்போது, எழும்பூரில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தலைமையில், நெல்லை வண்ணாரபேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே நெல்லை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல்வஹாப், எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ம.கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆரப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று திண்டுக்கல், ஈரோடு என பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திமுகவினர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அமைச்சர் பயன்படுத்தியதை போலவே செய்து காட்டினர். அதாவது, செல்போன் மீது மாத்திரை வைத்து பொடியாக்கி, எடிஎம் கார்டி, 500 ரூபாய் தாள் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு, ”போதை அமைச்சரை கைது செய்’ என்று கோஷம் எழுப்பினர்.
