விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கு பயிலும் மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, பதிலளிக்க மாணவி தடுமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அங்கிருந்த ஆசிரியரிடம் பேசியபோது, கடைசி பெஞ்சில் இருப்பவர்களுக்கும் இதுவும் தெரியாது என்றார். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களிடம் அமைச்சர் இப்படி நடந்து கொள்வதா? ரீல்ஸ் மோகத்துக்காக இவ்வாறு வீடியோ எடுத்து அரசுப் பள்ளியைத் தரம் குறைத்து காட்டுவதாக அமைச்சர் கீர்த்தனா மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்தனர். மேலும் அமைச்சரின் ஆங்கில பேச்சுகளை பகிர்ந்து அது குறித்தும் நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
விளம்பர வெறியை நிறுத்துங்கள்
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதுதான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.” என விமர்சித்திருந்தார்.
“ஆய்வு” கிடையாது, “அராஜகம்”
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், ““ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
“ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
எனவே, முதல்வர் விஜய் களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கையைக் கேலி செய்யாதீர்கள்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இன்று சிலர், “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையைப் பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல… என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசுப் பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசுப் பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியைக் கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையைக் கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி…
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசுப் பள்ளியை நம்பாதவர்கள், அரசுப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.” எனத் தெரிவித்துள்ளார்.
