முதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 7) வாபஸ் பெறப்பட்டது.
கடந்த ஜூலை 2ம் தேதி அதிமுகவை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியின் போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ’கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்’ என்று கூறி முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
திமுக மனு தாக்கல்
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்தார்.
அதில், ”கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது, தவறான, கண்ணியமற்ற, உள் நோக்கம் கொண்ட பேச்சாகும். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல்துறை ஆகியோருக்கு எதிராக தவறான பிம்பத்தை உருவாக்கவும், அதே வேளையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் விசாரணையில் தலையிடும் வகையிலும் ஆதவ் அர்ஜுனா பேச்சு அமைந்துள்ளது.
எனவே அவருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்.
அதுபோன்று வரும் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல விருப்பதாகவும் அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, வழக்கு தொடர்புடைய முக்கிய சாட்சிகளுக்கோ முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள், அதிகாரிகள் ,முகவர்கள் என அரசு தரப்பில் செயல்படும் நபர்கள் யாரும் எந்தவிதமான நிதி உதவியையோ, கருணை அடிப்படையிலான பணி நியமனமோ, அரசாணையோ, இடைக்கால நிவாரண தொகையோ அல்லது வேறு எந்த வடிவத்திலான அரசு பயன்களையோ வழங்க கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முதல்வர் விஜய், கரூர் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் நேற்று (ஜூலை 6) திமுக சார்பில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி கே.வி. விஸ்வநாதன் மற்றும் நீதிபதி அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ”தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஒரு கதையை உருவாக்கும் வகையில் பொதுவெளியில் பேசி வருகிறார். இது விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும்” என்று வாதம் முன்வைத்தார்.
இதை கேட்ட நீதிபதி விஸ்வநாதன், ”முதலமைச்சரின் பயணத்தை உச்ச நீதிமன்றம் ஒழுங்குபடுத்தி, பயணத் திட்டத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ”கரூர் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதை தடுக்கவே மனுதாரர் கோருகிறார்” என்று விளக்கம் அளித்தார்.
இது என்ன அரசியல் களமா?
இதைக் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், ‘அப்படியானால் பேச்சுரிமைக்கு நாங்கள் தடை விதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா. அவர்கள் பேசினால் நீங்களும் உங்கள் பேச்சால் எதிர்கொள்ளுங்கள். உச்ச நீதிமன்றமே சிபிஐக்கு மாற்றிய ஒரு வழக்கில் ஒரு அரசியல்வாதி தன்னை ஒரு தரப்பாக எப்படி இணைத்துக் கொள்ள முடியும்?.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகையும், கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளும் விசாரணையை எவ்வாறு பாதிக்கும்?’ என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ”முதல்வர் விஜய் அரசியல் தலைவராகவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகவும் இருக்கிறார்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி விஸ்வநாதன், ”முதல்வர் விஜய் பெயர் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளியாக பெயரிடப்படவில்லை. இந்த நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றுகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க இந்த அமர்வு விரும்பவில்லை என்று நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து திமுக தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ‘கரூர் வழக்கு விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரோஸ்த்தகி தலைமையிலான குழுவின் முன் இந்த விஷயத்தை எழுப்ப மனுதாரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த சில கருத்துகளுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்க தனியாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் சட்டப்படி கிடைக்கக்கூடிய வேறு வழிகளை மனுதாரர் நாடிச் செல்வதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
