முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் இருவரும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிராக, திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ், கொடுங்கையூரை சேர்ந்த லட்சுமி நாராயணன் ஆகிய இரு வாக்காளர்கள் என மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதே போல, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 3 வாரத்தில் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
அதேசமயம் தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் அடங்கிய தேர்தல் வழக்குகள் தொடரும்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய படிவம் 25 ஐ பூர்த்தி செய்து தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
