இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் : முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் புகழ் வணக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளான இன்று முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தி உள்ளனர்.

இரட்டை மலை சீனிவாசனின் 167 ஆவது பிறந்த நாளான இன்று முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பதிவில், ” சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

ADVERTISEMENT

கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

ADVERTISEMENT

தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என திராவிட மாடல் ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உதய நிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,” ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.

தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர்
மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்கள்.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி போராடிய முன்னோடி, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு, தலைமுறைகள் கடந்தும் சமத்துவப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறது.

அவரது தொலைநோக்கு சிந்தனை, உறுதியான சமூகப் பணி மற்றும் மனித சமத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு இன்று வரை நமக்கு ஊக்கமளிக்கிறது. அவர் கனவு கண்ட சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்” என தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது எக்ஸ் பதிவில்,”ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இடைவிடாது ஒலித்து அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சமத்துவம், மனிதநேயம் மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகநீதி போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை விதைத்த தீண்டாமை ஒழிப்பு போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாஜக தலைவரும், வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “சமுதாயச் சிந்தனையாளராக, ஊடகவியலாளராக, அரசியல் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காகவும், பஞ்சமி நிலங்களின் மீட்பிற்காகவும் அயராது போராடிய மாமனிதர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய இலட்சியங்களுக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தளர்வின்றி பாடுபட்ட அவரது தன்னலமற்ற சேவையும், சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நமது வழிகாட்டியாக நிலைத்திருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share