விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அதிருப்தி அடைந்த ஒரு முன்னணி பொறுப்பாளரை திமுக தன் கட்சியில் இணைத்துக் கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “நாங்கள் அமைச்சரவையில் சேர்ந்த உடனே, மற்றொரு கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று பொருள் இல்லை. அதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, விசிக-வின் ஆதரவைக் கோரி முதலமைச்சர் விஜயிடமிருந்து எங்களுக்கு வெளிப்படையாகக் கடிதம் வந்தது.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததைப் போல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது. அதற்குப் பிறகு, பத்து நாட்கள் கழித்துதான் அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை நாங்கள் எடுத்தோம்.
“கூட்டணி அதிகாரபூர்வமாக அமையவில்லை”
அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, ஊடகவியலாளர்கள் என்னிடம் “திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “ஆம், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம்” என்று பதிலளித்தேன். நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றாலும் கூட, த.வெ.க கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரபூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. என்று சொல்லி இருந்தேன்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி கூட்டணி தொடர்பாக, முதலமைச்சர் தமக்கு ஆதரவு நல்கிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதன் பொருள், இன்னும் த.வெ.க தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு கூட்டணி அமையவில்லை என்பதுதான்.
திமுகவுக்குத் துரோகம் செய்யவில்லை
விசிக அமைச்சரவையில் இடம்பெற்ற உடனே, நாங்கள் திமுகவுக்குத் துரோகம் இழைத்துவிட்டோம் என்று ஊடகத் தளங்களில் பலரும் விமர்சனங்களை வைக்கிறார்கள். பதவி என்றவுடன் திடீரென ஒரு கூட்டணியை உதறிவிட்டு நாங்கள் ஓடிவிடவில்லை.
நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கூட்டணித் தலைமை என்ற முறையில் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பகிர்ந்து கொண்டோம். அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறோம். அந்த உறவும் நட்பும் தொடர்ந்து நீடிக்கிறது. அவருடைய கவனத்திற்குக் கொண்டு சென்று, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பிறகே ஆதரவு நல்கினோம். எனவே, நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்றேன்.
திமுக மீது அதிருப்தி
இப்படியான ஒரு சூழல் நிலவி வருகிற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அதிருப்தி அடைந்த ஒரு முன்னணி பொறுப்பாளரை திமுக தன் கட்சியில் இணைத்துக் கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிர்ச்சியைத்தான் நான் வெளிப்படுத்தினேன்.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம்
செய்தியாளர் கேள்விக்கு, “கடந்த ஆட்சியிலும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். தற்போதைய ஆட்சியிலும் அதை வலியுறுத்துகிறோம்; தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டும் வரை விசிக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.” என்றார்.
