அமைச்சர்கள் தேவையின்றி அரசுப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என முதலமைச்சர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மாணவிகளிடம் அவர் ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பினார். அதற்கு மாணவிகள் பதிலளிக்கத் திணறிய நிலையில், அங்கிருந்த ஆசிரியரிடம், “முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும் போது, லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” என்று பேசினார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் அமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் கீர்த்தனாவின் இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று தேவையில்லாமல் அமைச்சர்கள் யாரும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்துத் துறைகளையும் சீரமைக்க வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை; போதிய செவிலியர்கள் இல்லை. இதையெல்லாம் முதலில் நாம் சரி செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “ஆளுநர் ஆய்வு செய்வதிலும் எந்தப் பலனும் இல்லை. அவரால் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் யாருக்கும் எவ்வித உத்தரவும் போட இயலாது; அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
