கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், இன்று (ஜூலை 6 ) 8 வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சியருக்கு மொத்தம் ரூ. 62,000 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சாட்சிகள் வந்தும் முடங்கிய விசாரணை
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணை, கடந்த 10 ஆண்டுகளாக 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவிலிருந்து நீதிமன்றம் வந்திருந்தார். ஆனால், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், அரசுத் தரப்பு சாட்சியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பின் தவறு காரணமாகவே இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சிவக்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தார். இந்தத் தொகையை ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். கேரளாவிலிருந்து வந்த மருத்துவரின் பயணச் செலவுக்காக அந்த தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அலைக்கழிக்கப்பட்ட சாட்சிகளும் குற்றவாளிகளும்
இதேபோல், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. இதில் சாட்சியம் அளிப்பதற்காகத் திருவாரூரிலிருந்து காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஆஜராகியிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். ஆனால், இங்கும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை நடைபெறவில்லை.
அரசுத் தரப்பின் இந்தத் தவறால், சாட்சிகளும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி சிவக்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு ரூ. 9,000 அபராதத் தொகையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இந்தத் தொகையிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கு தலா 1,000 ரூபாயும், காவல் துறை உதவி ஆய்வாளருக்கு 4,000 ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று விசாரணைக்கு வந்த மொத்தம் 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததைக் கண்டித்து, மொத்தம் ரூ. 62,000 அபராதம் விதித்து 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பின்னணி என்ன?
முன்னதாக, கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிதாக 24 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான முறையான அரசாணைகள் இன்னும் வழங்கப்படாததால், அவர்களால் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை நீடிக்கிறது.
கோவை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் முழுமையாக நியமிக்கப்படாததால், தினசரி வழக்கு விசாரணைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
