தஞ்சை அருகே திறந்தவெளி குடோனில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த குடோனில் இன்று (ஜூலை 6) தற்காலிக ஊழியர்கள் வழக்கம் போல் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் சரிந்து விழத் தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு (வயது 51), சகுந்தலா ஆகியோர் மீது நெல் மூட்டைகள் விழுந்தன. இதில் சின்னப்பொண்ணு மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சகுந்தலாவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளர்கள் காயமடைந்த சகுந்தலாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார், உயிரிழந்த சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது எப்படி என்பது குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
