தவெக கூட்டணியில் விசிக – திருமாவளவன் ஓபன் டாக்

Published On:

| By Pandeeswari Gurusamy

VCK

தவெக தலைமையிலான கூட்டணி அமைந்தால், அதில் விசிக இடம்பெறும்; அதில் எந்த ஐயமும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ” தேர்தலுக்கு முன்பாக எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனமடைவதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ADVERTISEMENT

தவெக ஆதரவு குறித்த விளக்கம்:

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நொடி வரை, திமுக தலைமைக்கு நாங்கள் தகவல் கொடுத்தோம். “இப்படித்தான் முடிவெடுக்கப் போகிறோம், இந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறோம்; இதுதான் அதற்கான காரணம்” என்பதை வெளிப்படையாகப் பேசினோம். நட்புறவைச் சிதைக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

“தவெக கூட்டணியில் சேருவோம் என்று முடிவெடுத்தால், நீங்கள் அமைச்சரானால்தான் தமிழகத்தில் எழுச்சி உருவாகும். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும்” என்று ரவிக்குமார் உள்ளிட்ட கட்சியினர் சொன்னார்கள். ஆனால், 30 ஆண்டுகாலம் உழைத்த தம்பி வன்னி அரசு போன்றவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று விரும்பினேன். என்னைப் பற்றிய தனிப்பட்ட முடிவை எடுக்க எனக்கு அதிகாரமும் சுதந்திரமும் இருக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகுதான் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை நாங்கள் அறிவித்தோம்.

ADVERTISEMENT

முழு மகிழ்ச்சி இல்லைதான்

பெரும்பான்மை வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்திருக்கிறது. அதில் நமக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான். காரணம், நாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டவர்கள்; நாம் எப்படி உடனே மகிழ்ச்சி அடைய முடியும்? இன்னும் சொல்லப்போனால், நாம் தவெகவை விமர்சித்திருக்கிறோம். ‘ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள்’ என்று விமர்சித்துவிட்டு, உடனே பதவிக்காகச் சென்று ஒட்டிக்கொள்ள முடியுமா? “உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம், எனக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்” என்றா நாங்கள் பேசினோம்? அப்படி நாங்கள் பேசவில்லை.

முதலமைச்சருடனான சந்திப்பு:

வன்னி அரசை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்த பிறகு, நானும், ரவிக்குமாரும், சிந்தனைச் செல்வனும் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம், “மதச்சார்பற்ற சக்திகளாக களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள எங்களைப் போன்றவர்களை நீங்கள் அழைத்து ஆதரவு கேட்டிருப்பது ஒரு துணிச்சலான முடிவு. ஆகவே, நீங்கள் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டியது எங்களது பொறுப்பு. மதச்சார்பின்மையில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு, தேர்தலுக்கு முன்பு இருந்த சந்தேகத்தைப் போக்கியுள்ளது. எனவே, உங்களுக்கு ஆதரவு நல்குகிறோம்; உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமைக்கு உண்மையாக, நட்புக்கு உறுதியாக இருப்போம். ஐந்து ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடர நாங்கள் உற்ற துணையாக இருப்போம்” என்று கூறினேன். இதில் என்ன துரோகம் இருக்கிறது?

ADVERTISEMENT

கூட்டணி குறித்த தற்போதைய நிலை:

பத்திரிகையாளர்கள் “நீங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறீர்களா இல்லையா?” என்று கேட்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று திமுக தலைமைதான் அறிவித்ததே தவிர, நான் இதுவரை அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமா என்றும் நான் சொல்லவில்லை. தற்போதைய அமைச்சரவையில் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 1-ஆம் தேதி நடந்ததில் பங்கேற்றோம். இன்னும் அங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் விசிக இடம்பெறும்; அதில் எந்த ஐயமும் இல்லை.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், திமுகவின் தலைவர்களே ஒன்றுகூடி விசிக நிர்வாகியை அழைத்து திமுகவில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், விசிகவுடன் எங்களுக்கு உறவு இல்லை என்று திமுகவே மறைமுகமாகச் சொல்கிறது. “விசிகவுடன் கூட்டணி இல்லை” என்று காட்டியது ஸ்டாலின்தான். ஆனாலும், அவர் மீதான மதிப்பு எனக்கு என்றும் குறையாது.

பாஜகவில் இருக்கும் தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, பாமகவின் அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல அல்லாமல், தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்.”என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share