கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில், கரூர் துயர வழக்குடன் தன்னை தொடர்புபடுத்தும் வகையில் குதிரை பேர வழக்கு பதியப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி தனியே மனு தாக்கல் செய்தனர்.
இதில் செந்தில் பாலாஜி தனது மனுவில், ”எப்.ஐ.ஆரில் கூட குற்றம்சாட்டப்பட்டவராக என் பெயர் சேர்க்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் வலுகட்டாயமாக என்னை இழுத்துள்ளார்கள்.
நான் இளையராஜாவைத் தொடர்புகொண்டேன் என்பதற்கோ, மெசேஜ் அனுப்பினேன் என்பதற்கோ, அவரை நேரில் சந்தித்தேன் என்பதற்கோ, பணத்தை கையாண்டேன் என்பதற்கோ, மிரட்டல் விடுத்தேன் என்பதற்கோ, தன் சார்பில் ஒருவரை அனுப்பினேன் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ” நிறைய கணக்குகள் தீர்க்க வேண்டியுள்ளது” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு, அரசியல் பழிவாங்கல் என்ற அச்சத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக கரூர் இடைத்தேர்தல் நடைபெறும் இந்தச் சமயத்தில், என்னை இந்த வழக்குடன் எப்படியாவது வலுக்கட்டாயமாகத் தொடர்புபடுத்தும் வகையிலேயே தற்போதைய வழக்கு அமைந்துள்ளது.
என்னையும் எனது சகோதரரையும் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதில் சிக்க வைக்க கைது செய்யப்பட்ட நபர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த கட்டாய விசாரணை மற்றும் மிரட்டல் குறித்த புகார்கள், நீதிமன்றக் காவலில் வைக்கும் நிலையிலேயே முதன்மை அமர்வு நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் துறையின் விசாரணையில் அளிக்கும் எந்தவொரு வாக்குமூலத்தையும் வைத்துக்கொண்டு அடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. அந்த வாக்குமூலத்தை நிரூபிக்கும் வகையில் தனியாக வேறு வலுவான, சட்டப்பூர்வமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும்.
நான் கோவை தெற்குத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும், சமூகத்தில் பொதுக் கடமை கொண்டவராகவும் இருக்கிறேன். எனவே தலைமறைவாகவோ, நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமோ இல்லை. விசாரணை அதிகாரி அழைக்கும் போதெல்லாம் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு கடுமையான நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதனால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மனுவும், அவரது சகோதரர் மனுவும் நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை (ஜூலை 8) விசாரணைக்கு வருகிறது.
