தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலைகளில் சாலைகளை அமைக்காமலேயே பல கோடி ரூபாய் பொதுப் பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகக் கூறி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 25ஆம் தேதி எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இதில் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது. ஆனால் என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கப்படவில்லை என்று எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் எ.வ.வேலு உடல்நல பாதிப்பு காரணமாகச் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஜராகவில்லை.
இந்தச்சூழலில் அவர் தன் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைக்கால மனு ஒன்றையும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்துள்ளார். அதில், முதல் தகவல் அறிக்கையின் (FIR) அசல் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதிலிருந்து முதலில் விலக்கு அளிக்க வேண்டும். எப்.ஐ.ஆர் அசல் நகலைத் தாக்கல் செய்யாமலேயே பிரதான மனுவைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனுக்களை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்கை விசாரிக்கும் நீதிபதி இளந்திரையன் விசாரிக்கவுள்ளார்.
இதில் அசல் எஃப்.ஐ.ஆர் நகலைச் சமர்ப்பிப்பதில் விலக்கு கேட்டுத் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய கோரும் பிரதான மனு விசாரணைக்கு எண் வழங்கப்பட்டு பட்டியலிடப்படும் என தகவல்கள் வருகின்றன.
