பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி: அரசகுமாரிடம் நடந்த விசாரணையில் பகீர் தகவல்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rs. 100 Crore School Fraud: PT. Arasakumar to be produced before magistrate today

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்ட அரசகுமாரிடம் நடந்த விசாரணையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் பெறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க.வின் செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவராக உள்ள அரசகுமார், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை அவர் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சிறப்புப் படை போலீசார் கடந்த ஜூன் 27ஆம் தேதி அரசகுமாரைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்ற மத்திய குற்றப்பிரிவினர், காவல் நிலையத்தில் வைத்து 5 நாட்களாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்:

போலீஸ் விசாரணையின் போது அரசகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது:

ADVERTISEMENT

கல்வித்துறை அதிகாரிகளுக்கு மதுவிருந்து: சென்னை தி.நகரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில், கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசகுமார் மதுவிருந்து அளித்ததுள்ளார். அவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லஞ்சப் பட்டியல்: கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் உயர் பொறுப்புகளில் வகித்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு எவ்வளவு லஞ்சப் பணம் கைமாறியது என்பது குறித்தும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

டிஜிட்டல் பரிவர்த்தனை ஆவணங்கள்: குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அரசகுமார் பணம் பெற்றுள்ளார். இதற்கான வலுவான ஆவணங்களையும் போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய கல்வித்துறை அதிகாரிகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க போலீசார் தயாராகி வருக்கின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share