ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்: முடிவை சீராய்வு செய்ய முதல்வருக்கு ரவி குமார் எம்பி கோரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

Ravikumar

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற அமைச்சகத்தின் பெயர் ‘சமூகநீதித்துறை’ என மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர் வன்னி அரசு பதவியேற்ற பின்னர், இந்த பெயர் மாற்றம் குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகின. இந்நிலையில், “ஆதி திராவிடர் என்ற சாதி கடந்த, சமயச் சார்பற்ற அடையாளத்தைக் கொச்சையாகப் புரிந்துகொள்பவர்கள்தாம் அதை மாற்ற வேண்டும் எனக் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது” என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சாதியின் பெயர் அல்ல

இதுகுறித்து அவர் தலித் இதழில் எழுதி உள்ள தலையங்கத்தில், “ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை மாற்ற வேண்டும் என வலதுசாரி சார்புகொண்ட சிலர் கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதற்கு முன்பிருந்த அதிமுக, திமுக அரசுகள் அதற்கு இணங்கவில்லை. அதற்குக் காரணம், ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் அல்ல என்பதும்; அந்தப் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி ஆட்சியில் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுமாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் எஸ்சி பட்டியலில் முதலாவதாகவும் அதிக எண்ணிக்கை கொண்டதாகவும் குறிக்கப்பட்டுள்ள பிரிவு ஆதி திராவிடர் என்பதாகும். அதைப் பார்க்கும்போது ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதியின் பெயர் என்றே பலரும் கருதுவர். ஆனால் அதுவொரு சாதியின் பெயர் அல்ல. 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆண்டுகொண்டிருந்த நீதிக் கட்சி ஆட்சியின்போது ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றைய தலைவர்களாயிருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா, மாவீரன் இரட்டைமலை சீனிவாசன், ஆகியோர் போராடிப்பெற்ற ‘சாதி கடந்த அடையாளம்’ அது. அதற்குமுன் ஆதி திராவிடர் என்ற பெயரில் எந்தவொரு சாதியும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்வைத்த சாதி ஒழிப்பு என்ற செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் பட்டியலின மக்கள் ஒன்றுபட வேண்டும் அதற்கு அவர்கள் தமக்கிடையிலான பாகுபாடுகளைக் களைந்துகொள்ளவேண்டும். உட்சாதிப் பிரிவுகள் என்பவை சனாதன இந்துமதத்தின் சூழ்ச்சி. அது தொடரும்வரை அந்தப் பிரிவுகளின் அடிப்படையிலான வேற்றுமைகளும் பாகுபாடுகளும் தொடரவேசெய்யும். அதனால்தான் உட்சாதி அடையாளங்களை முன்னிறுத்தக்கூடாது என அம்பேத்கர் வலியுறுத்தினார். அம்பேத்கரின் கருத்தியல் வழிநின்று பார்த்தால் எஸ்சி மக்கள் தம்மைச் சாதி கடந்த ஒரு அடையாளத்தின்கீழ் திரட்டிக்கொள்வது உடனடி அவசியம் என்பதை உணரலாம். இதை அம்பேத்கர் பிறப்பதற்கு முன்பே புரிந்துகொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் ஆவர். அதனால்தான் சாதி கடந்த அடையாளமாக ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

ADVERTISEMENT

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தம்மை அமைப்பாகத் திரட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளனர். அவ்வாறு உருவான அமைப்புகளில் புராண அடையாளமோ, மத அடையாளமோ அற்ற ஒரு ‘சமயச் சார்பற்ற’ (secular ) வகையினமாக முன்வைக்கப்பட்டது ஆதி திராவிடர் என்பதே ஆகும். அதை முன்வைத்த தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியும், தொலைநோக்குப் பார்வையும் போற்றுதலுக்குரியவை. அது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்குமான முன்னுதாரணம் ஆகும்.

சமூக நீதி அமைச்சகம் என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது என சிலருக்குத் தோன்றலாம். ஒன்றிய அரசில் வரலாற்று ரீதியாக, 1985-ஆம் ஆண்டு வரை பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) தொடர்பான விவகாரங்கள் அவற்றின் முக்கியத்துவம் கருதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தன. 1985 இல் அவற்றுக்கென நலத் துறை எனத் தனித் துறை உருவாக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டில், அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் அதை சமூக நீதித் துறை எனப் பெயர் மாற்றம் செய்தது; 1999-ஆம் ஆண்டில் தனியே பழங்குடியினர் விவகார அமைச்சகத்தையும் உருவாக்கியது.

ADVERTISEMENT

இப்போது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் என அது பெயரிடப்பட்டிருக்கிறது. அது, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைப் பிரிவினரான — பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரின் — நலன், ஆகிய பொறுப்புகளைக் கவனிக்கிறது. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 17 % இருக்கும் எஸ்சி சமூகத்தினருக்கென தனி அமைச்சகம் இல்லாத நிலையில் அம் மக்களின் நலன்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றன. அதே நிலை எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும்.

எதிர்கால ஆபத்து

ஆதி திராவிடர் என்ற சாதி கடந்த சமயச் சார்பற்ற அடையாளத்தை கொச்சையாகப் புரிந்துகொள்பவர்கள்தாம் அதை மாற்ற வேண்டும் எனக் கோருகிறார்கள். அந்த கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை முதன்மையாகக் கருதித்தான் சமூகநீதி என்ற சொல்லாட்சிப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தத் துறைக்கு இந்த சமூகத்தின்மீது அக்கறையற்ற எவர் வேண்டுமானாலும் அமைச்சராகலாம் என்ற எண்ணத்தையும் அது ஏற்படுத்துகிறது. இப்போது சமூக நீதி அமைச்சகத்தின்கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுகிறது என்றாலும் இன்னும் சில காலத்தில் அந்தப் பெயரும்கூட மாற்றப்படும் ஆபத்து உள்ளது. எனவே, இந்தப் பெயர் மாற்ற முடிவை முதலமைச்சர் சீராய்வு செய்யவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share