பொறுப்பு ஆளுநருக்கு ‘பொறுப்பு’ வேண்டாமா? – அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vanni arasu

மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன்.
ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்.

ADVERTISEMENT

வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.

ADVERTISEMENT

கேரளாவின் ஆளுநராக உள்ள அர்லேகர், கடந்த மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார். பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தி திணிப்பு, தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குலக்கல்வியான
சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால் தான், ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று ஒன்றிய அரசு சொல்லி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, இந்திய ஒன்றிய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு ஆளுநர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத ஆளுநர் அர்லேகர் அவர்கள், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தான் தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா?அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என ‘ஆலோசனை’ பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.

2014ல் ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது.
இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்?

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும்.
எமது முதல்வர் முதல்வர் அதற்கான திட்டங்களை உத்திகளை மேற்கொள்வார். ஆளுநர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து,அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.

தமிழ் வளர்த்த மதுரையில் ‘வசுதைவ குடும்பகம்’ என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.

புறநானூறு சொல்லும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார்.

தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் – நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share