திமுக தலைவராக இருப்பதால் மட்டுமே கட்சியின் பல்வேறு அணிகளோ அல்லது நிர்வாகிகளோ சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் நான் பொறுப்பாக முடியாது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய ‘ஜான் பிரிட்டோ’ அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்று திமுக ஐடி விங் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதை எதிர்த்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “நான் கட்சியின் தலைவராக இருந்து கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளை நிர்வாக ரீதியாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருந்தாலும், கட்சியின் உறுப்பினர்கள் அல்லது பிரிவுகள் மேற்கொள்ளும் தனிப்பட்ட செயல்களுக்கு சட்டரீதியாக நான் பொறுப்பேற்கவோ அல்லது கடமைப்பட்டிருக்கவோ முடியாது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்க துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ அமைச்சரின் உறவினர் என்று குறிப்பிட்டிருந்த அந்த பதிவை வெளியிட திமுக ஐடி விங் அணிக்கு நான் எந்தவித உத்தரவோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்
மேலும் அதில், “ஜான் பிரிட்டோ என்ற பெயரில் தனக்கு உறவினர் இருப்பதையும் அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருப்பதையும் அமைச்சர் மறுக்கவில்லை.
அமைச்சரின் மனைவி, மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் மீதும் அமலாக்க துறையால் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் மீது மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
எனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருடன் தொடர்பு படுத்தியதற்காக தனது நற்பெயர் கெட்டுவிட்டதாக மனுதாரர் கூறுவது விசித்திரமானது.
ஏனென்றால் அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அமைச்சர் தனது சொந்த குடும்பத்தில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்தோ அல்லது தனது உறவினரான ஜான் பிரிட்டோவிடம் இருந்தோ தனித்து இருக்கவில்லை. அவ்வாறு செய்யாதவரை வேறு குற்ற செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு படுத்தப்பட்டதற்காக தனது பெயர் களங்கப்பட்டு விட்டதாக அவர் உரிமை கோர முடியாது.
அதோடு அவர் கடந்த காலங்களில் என்னையும் எனது குடும்பத்தினரையும் கடுமையான மற்றும் தரக்குறைவான சொற்களை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.
2026 மார்ச் 12ஆம் தேதி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் நடத்திய போராட்டத்தின் போது, என்னை முட்டாள் முதலமைச்சர் என்று கூறினார்.
அதனை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டும் கருத முடியாது. அது இழிவுபடுத்தும் மற்றும் தனிப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதில் மனு அமைச்சரின் வழக்கறிஞர் சூரிய பிரகாசமிடம் வழங்கப்பட்டு விட்டதாக, திமுக தலைவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், நீதிபதி கோவிந்தராஜன் திலகவதியிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இடைக்கால நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
