தருமபுரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பேருந்து நிலையத்திற்குள், இளம்பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தருமபுரி அருகே உள்ள தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஷீலா (24). இவர் அப்பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (31) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களால் ஷீலா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, நேற்று (ஜூலை 7) இரவு ராஜகோபால் கவுண்டர் நகர பேருந்து நிலையத்தில் ஷீலாவை வழிமறித்து, அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், சின்னசாமியைப் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஷீலாவுக்குத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதல் அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது இரண்டாம் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தினர் வேண்டுகோள்:
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஊடகங்களுக்கு விடுத்த வேண்டுகோளில், “என் தங்கை தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக ஊடகங்கள் தவறான தகவல்களையோ அல்லது எனது தங்கையின் புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனிமொழி எம்பி கண்டனம்:
இச்சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தருமபுரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பேருந்து நிலையத்திற்குள், இளம் பெண்ணொருவர் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
