கரூர் துயரம்: அரசு வேலை முடிவு அதிகார துஷ்பிரயோகம் – சுப்பராயன் எம்பி

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர் தவெக மாநாட்டு நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதை அதிகார துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்தத் துயரச் சம்பவம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நாளை கரூர் செல்லவிருக்கிறார்.

முதல்வரின் நிகழ்ச்சி நிரல் குறித்து வெளியான செய்திக் குறிப்பில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்பி சுப்பராயன், “அரசு வேலை வழங்கும் முடிவு குறித்து தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்!
இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும்!
மேலும் எதிர்காலத்தில் அரசிற்கு கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும்!
இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும்!அவைதான் அதை செய்ய வேண்டும்!
அதை செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக!
அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது!
தவெக அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share