‘திருமா மனம் புண்பட்டிருந்தால்..’ – நோபல் பரிசு விமர்சனத்தை திரும்ப பெற்ற வைகோ உருக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vaiko

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து தாம் பேசிய நோபல் பரிசு விமர்சனங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான சிறந்த தலைவர் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், “நாங்கள் தவெக கூட்டணியில் இணைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் எதுவும் இல்லை; தற்போதைக்கு திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வைகோ “அவர் பேசியது நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து, அவ்வளவுதான்” என கிண்டலாக விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இதற்கு அரியலூரில் பதிலளித்த திருமாவளவன், “பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எனது பார்வை. இதை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாது. வைகோவின் நோபல் பரிசு பரிந்துரைக்கு என் நன்றி; ஒருவேளை பரிசு கிடைத்தால் அவருக்கே முதல் நன்றி சொல்வேன்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

வைகோ உருக்கமான விளக்கம்:

இந்நிலையில் இன்று சங்கரன்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொல். திருமாவளவனுக்கு நான் தொடர்ந்து ஊக்கமளித்து, என்னால் இயன்ற அளவு பக்கபலமாக நின்று வருகிறேன். எதிர்காலத்திலும் எனது ஆதரவு அப்படியேதான் இருக்கும். அவர் மீது எனக்கு எந்தவித கோபமோ அல்லது வருத்தமோ கிடையாது.

ADVERTISEMENT

நான் பேசிய சொற்கள் அவரது மனதைப் புண்படுத்தியிருக்குமானால், அந்த சொற்களை நான் முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் (I withdraw my words). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதோ அல்லது திருமாவளவன் மீதோ எனக்கு இம்மியளவும் கசப்புணர்வு கிடையாது.

அவர் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயன்படக்கூடிய வகையில் அவர் பணியாற்றி வருகிறார். தனக்கென்று ஒரு குடும்பம் கூட இல்லாமல் பொதுவாழ்விற்காகவே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதை நானே பலமுறை அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ADVERTISEMENT

ஜனநாயக ரீதியாகக் கருத்து சொல்வது அவருடைய உரிமை. அதற்கு நான் எதிர்வினையாற்றிய விதம் அவரது மனதைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் கூறுகிறேன், நான் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.” என்று உருக்கமாக பேசிய வைகோ தற்போதைய அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share