கமேனி இறுதிச் சடங்குக்கு மத்தியில் மீண்டும் போர் பதற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஈரான் மீது கடந்த 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் இப்போது ஈரானின் பல நகரங்கள் வழியாக நடைபெற்று வருகின்றது. கமேனியின் உடல், பாதுகாப்புக் காரணங்களால் பல மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது தான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. டெஹ்ரானில் தொடங்கிய இந்த ஊர்வலம், ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களுக்கு சென்றுள்ளது. அங்கு சில இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். “அமெரிக்கா ஒழிக, இஸ்ரேல் ஒழிக”, “பழிவாங்குவோம்” போன்ற கோஷங்கள் வீதிகளை அதிரச் செய்தன. இன்று கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த இறுதிச் சடங்குகளின்போது அவரது மகன் மொஜ்தபா கமேனி பொதுமக்கள் முன் அதிகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் அவரை ஈரானின் புதிய உச்சத் தலைவராக நியமித்ததாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஒருபுறம் துக்கம், மறுபுறம் போர்

இந்த இறுதி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோற்றுப் போயுள்ளன.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்துதான் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஈரானில் நடைபெற்று வந்தன.

டிரம்ப் அதிரடி

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

ஈரான் பதிலடி

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பல இடங்கள் உட்பட, 5 மாகாணங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்த சூழலில், ஈரான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்தது.

ஈரான் அரசு தரப்பில், சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் இந்த தகவலை உறுதிப் படுத்தி உள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் ஈராக், லெபனான், ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே எச்சரிக்கை நிலையில் உள்ளன. இஸ்ரேல் எல்லையிலும், பாரசீக வளைகுடா பகுதியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள இந்த தாக்குதல்களால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 12% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share