முதல்வர் விஜய் வழங்கும் அரசு வேலை… கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவுக்கு திமுக கடிதம்!

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் நாளை கரூர் செல்லவிருக்கும் நிலையில், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூருக்கு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து கார் மூலம் கரூருக்கு செல்கிறார்.

ADVERTISEMENT

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கிவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. 

ஆனால் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சட்டப்படி கிடைக்கக்கூடிய வேறு வழிகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியது. 

ADVERTISEMENT

இந்தசூழலில்  திமுக. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவுக்கு மனு அனுப்பியுள்ளார். 

அதில்,  ”10.07.2026 (நாளை) அன்று முதலமைச்சர்  ஜோசப் விஜய் கரூருக்குச் சென்று த.வெ.க. கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ள நிலையில், நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்தக் குடும்பத்தினர் மீது எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தப்படவோ, அவர்களுடன் தலையீடு மேற்கொள்ளப்படவோ கூடாது என்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் சி.பி.ஐ.யும் மேற்கொள்ளுமாறு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 07.07.2026 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சட்டரீதியான தீர்வுகளை நாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மேற்பார்வைக் குழுவிடம் மனு தாக்கல் செய்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும், ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்ட அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் தொடர்பாக – சாட்சிகளுடன் அரசு நிர்வாகம் நேரடியாக தொடர்புகொள்வது, விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து நியாயமான ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவ்வழக்கின் சாட்சிகள் மீது இந்த நலத்திட்ட உதவிகளால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேற்பார்வைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share