தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி: சங்க பொருளாளரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Muthukumar

சென்னை: முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி, அங்கீகாரங்களை பெற்றுத் தருவதற்காக தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இதில் அரசகுமாரைக் கைது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இரண்டாவது குற்றவாளியாக சங்கத்தின் பொருளாளரான முத்துக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கைதாவதைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளர் முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். மேலும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் எனக் கூறி மனுதாரர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இதுவரை 47 பள்ளிகளின் நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், சுமார் ஆயிரம் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் உள்ள தொடர்பு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மனுதாரர் முத்துக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் அமைச்சருடனோ அல்லது அரசுடனோ மனுதாரருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக இருக்கிறார்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கின் தற்போதைய சூழலில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி, பொருளாளர் முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து முத்துக்குமாரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share