‘பணமா, ஜனமா என்று கேட்டால்.. ‘ கரூரில் முதல்வர் விஜய் உருக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று தமிழக முதல்வர் விஜய் கரூர் சென்றார். அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் விஜய்யை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும், மனதளவில் ஏற்பட்ட சில வலிகளையும் காயங்களையும் அவனால் எளிதில் மறந்துவிட முடியாது. என் வாழ்க்கையிலும் அப்படித்தான்; பல வலிகளையும் காயங்களையும் கடந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால், எல்லாவற்றையும் விட எனக்கு மிக அதிகப்படியான காயத்தையும் வலியையும் தந்தது கரூரில் நடந்த அந்தச் சம்பவம்தான்.

ADVERTISEMENT

மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை எடுத்து பேச வேண்டும் என்று திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் எனத் தொடர்ந்து நாம் பயணித்துக் கொண்டிருந்தோம். அரியலூரில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு பெரம்பலூர் செல்வதற்கு முன்பாக, அங்குள்ள காவல்துறை எங்களை எச்சரித்தது. ‘இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது, நேரமும் ஆகிவிட்டது என்பதால் பாதுகாப்பு கருதி வர வேண்டாம்’ என்று கூறினர். நமக்கு வேறு வழியில்லாததாலும், பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மன வலியோடு நாங்கள் அங்கு செல்லாமல் பயணத்தைத் தவிர்த்தோம். பின்னர், அதற்காக அந்த மக்களிடம் மன்னிப்பும் கோரினோம்.

கரூர் சம்பவத்தின் பின்னணியில் நடந்த நாடகம்

அதேபோல, நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு கரூர் சென்றபோதும், அங்கிருந்த காவல்துறை எங்களை எச்சரித்திருக்கலாம் அல்லவா? ‘இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது, எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று அவர்கள் முன்னரே தெரிவித்திருக்கலாம். ஏதோ தவறாக இருக்கிறது என்று நினைத்தாலே, காவல்துறையே அந்த கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அதற்கு எங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அவசியமே அவர்களுக்குக் கிடையாது.

ADVERTISEMENT

ஆனால், காவல்துறை எங்களை திட்டமிட்டு அந்த இடத்திற்கு வரவழைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. அதை நான் முழுமையாக நம்பிவிட்டேன். நான் பேசத் தொடங்கியபோது கூட அவர்களுக்கு நன்றியையெல்லாம் கூறினேன். ஆனால், அங்கு அப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இதற்கு எல்லாம் யார் காரணம். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், யார் சொல்லிக் கொடுத்து இதையெல்லாம் செய்தார்கள் என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.

பழியை என் மீது தூக்கிப் போடுவதா?

அந்தச் கொடூர சம்பவத்தில் நாம் யாரையெல்லாம் இழந்திருக்கிறோம் தெரியுமா? ஒரு டிவியில் எனது படமோ பாட்டோ வந்தது என்றால் அம்மா விஜய் மாமா.. என்று அம்மாவிடம் சொல்லி டிவி ஸ்கிரீனில் தொட்டு முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்த என் அக்கா, தங்கைகளின் தங்கப் பிள்ளைகளை இழந்துள்ளோம். மழலை மொழி கூட சரியாக பேச வராத போதும், பேப்பரில் என் படத்தை பார்த்தால் சிரித்துக்கொண்டு இருந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்போடு கடவுள் போல இருந்த பச்சைக் குழந்தைகளை நாம் இழந்து நிற்கிறோம் அய்யா. என் அக்கா தங்கச்சி அண்ணா தம்பி என குடும்ப உறவுகளை இழந்தது போன்ற பெருந்துயரத்தில் நான் வலியோடு அமர்ந்திருக்கும்போது, என்னை ஏளனமாகப் பேசுகிறீர்களா. என் மேல் பழியை என் மீது தூக்கிப் போடுவதா? ஏன் என்ன இதன் பின்னணி என்ன என்று நினைத்து வீட்டில் உட்கார்ந்து இருந்த போது’விஜய் ஓடி ஒளிந்துவிட்டார்’ என்று விமர்சிக்கிறீர்களே, வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

ADVERTISEMENT

மக்களே உங்களிடமே கேட்கிறேன். அங்கு அவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருந்ததே, அதற்கு ஏதேனும் முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா? இந்த இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போலீஸ் ஆபீசர் சொல்லிகிறாரே அதற்கு என்ன அர்த்தம்? இவ்வளவு பெரிய வலியையும் காயத்தையும் எங்களுக்குக் கொடுத்துவிட்டு, பழியையும் எங்கள் மீதே போட்டுவிட்டு, அதில் சிலர் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். சட்டசபையில் வாய் கூசாமல் ஸ்டாலின் சார் பழியைத் நம்மீது திருப்பிவிட்டு அங்கு ஒரு அரசியல் செய்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

“பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம்”

நமக்காக வந்திருக்கும் மக்களைக் காக்க வைக்க நான் ஒன்றும் ஆதாயம் தேடும் அரசியல்வாதி கிடையாது. மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த இந்த மக்களுக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நான் அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

நமக்கு இத்தனை வலிகளை, காயங்களை கொடுத்தவர்களுக்கு, நடந்து முடிந்த இந்த 2026 தேர்தலில் நீங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அதுமட்டும் போதாது; தவறு செய்தவர்கள் இனி காலத்திற்கும் மீண்டு எழ முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடியை நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களைச் செய்வதன் மூலம் நான் மக்களை விட்டு ஓடிவிடுவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். யார் என்ன செய்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் என் மக்களை விட்டு ஓடமாட்டேன். இதை அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், நாளையும் சொல்வேன் – தில்லாக, கெத்தாகச் சொல்வேன். எனக்கு ‘பணமா, ஜனமா’ என்ற கேட்டால், என் ஜனம்தான் எனக்கு முக்கியம்.” என்று முதல்வர் விஜய் மிக ஆவேசமாகப் பேசி முடித்தார்.

சொன்னதெல்லாம் சும்மா ஒரு சாம்பிள்தான் – திட்டங்களை பட்டியலிட்ட விஜய்

இன்னும் கனவிலேயே இருக்கிறீர்களா? – திமுகவை விளாசிய முதல்வர் விஜய்!

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share