5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும்  மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். 

ADVERTISEMENT

அதுபோன்று இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் தமிழகத்தில், தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. 

ADVERTISEMENT

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி ஒரு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். 

அதில், ”காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.  எனவே, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151 ஏ வின் கீழ் காலியானது இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். 

ADVERTISEMENT

இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது உச்ச நீதிமன்றத்தின் மூன்று முந்தைய தீர்ப்புகளுக்கு முரணாக அமையும். 

வேட்பாளர்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகநாதன், “சஞ்சுவையா vs தேர்தல் ஆணையம் (1967), தேர்தல் ஆணையம் vs தெலுங்கானா ராஷ்டிர சமிதி(2011),  பிரமோத் லட்சுமண் vs தேர்தல் ஆணையம் (2018) ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டி வாதாடினார். அதாவது சம்பந்தப்பட்ட தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக நிலுவையில் இருக்கும் போது இடைத்தேர்தல்களை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவுப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.  

எனவே இந்த தேர்தல் வழக்குகளில் உத்தரவுகள் வருவதற்கு முன்பாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே ராஜினாமா செய்தவர்களுக்கும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ராஜினாமா செய்தவர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை பார்க்க வேண்டும்.

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பதவியை மே 10ம் தேதி ராஜினாமா செய்தார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாமதமாகவே தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். மேலும் சிலரும் தங்கள் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே ராஜினாமா செய்து விட்டனர். இந்த பொதுநல வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கோரினார்

முதல்வர் விஜய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாசிலாமணி, ‘தேர்தல் நடத்தும் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். தனிநபர்கள் தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சம்பந்தப்பட்ட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டார். 

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், ‘இந்த 5 தொகுதிகள் தொடர்பாக எந்தெந்த கோரிக்கைகளுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது பற்றி ஆணையத்திடம் எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்திடமிருந்து இன்னும் நோட்டீஸோ அல்லது வழக்கு தொடர்பான ஆவணமோ ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ‘ஜனநாயகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் வழக்கு தொடர என்ன தகுதி இருக்கிறது என்று குறுகிய நோக்கில் பார்க்க முடியாது. 

எம்எல்ஏக்கள் எப்போது ராஜினாமா செய்தார்கள்? எப்போது தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டது என்று அட்வகேட் ஜெனரல் தேதிகளை குறிப்பிட்டு முன்வைத்த வாதத்தை ஆழமாக ஆராய வேண்டும். 

அதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால் எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்?.

தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதேசமயம் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரும்போது அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். அதுவரை திருச்சி கிழக்கு, கரூர் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்படுகிறது” என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share