தீய சக்தி திமுகவை திருத்தவும் முடியாது, அவர்களாகத் திருந்துவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கப் போவதில்லை. வரும் இடைத்தேர்தலில் மக்களே, இந்தத் தீயசக்தி திமுகவை நன்றாக வைத்து வெளுத்து விடுங்கள் என முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார்.
கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய்,”வாயைத் திறங்க CM… அடடா.. உங்கள் CM ஐநெஞ்சிலேயே குத்திவிட்டு வந்தீர்கள் பாருங்கள், அதெல்லாம் வேற லெவல்! “பேசுங்கள் பேசுங்கள்” என்கிறீர்கள், பேசினால் எழுந்து ஓடிவிடுகிறீர்கள். இனிமேல் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும் என்று, ஒரு நண்பர் ஒருவர் சொன்னார், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எல்லா கதவுகளையும் இழுத்துப் பூட்டுங்கள்” என்று சொல்லிவிட்டுத்தான் பேச ஆரம்பிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஏனென்றால், பேசிக்கொண்டிருக்கும் போதே எழுந்து ஓடிவிடுகிறார்கள். ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டார்கள், இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நமது பாலிசி
நாம் அரசியல் பேசினால், “விஜய் எல்லாம் அரசியல் பேசலாமா?” என்கிறார்கள். சரிப்பா, நமக்கு எதற்கு வம்பு, நாம் பாட்டுக்கு நம் வேலையைப் பார்ப்போம், எதற்கு அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டு என்று இருந்தால், “விஜய்க்கு அரசியலே பேசத் தெரியவில்லை” என்கிறார்கள். இப்படியே மாறி மாறி, “மேகதாது அணையைப் பற்றி என்ன தெரியும் விஜய்க்கு, அதைப் பற்றிப் பேசவில்லை” என்கிறார்கள். இப்படி நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்தே ஒரு கூட்டம் குறை மேல் குறையாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. பாட்டுக்கு பாட்டு கச்சேரி செய்கிறார்கள். எங்களுக்கும் பண்ணத் தெரியும், பண்ணலாமா?
இந்த மேகதாது அணை சம்பந்தமான அந்த வழக்கில் தமிழ்நாட்டின் மனுவை உச்ச நீதிமன்றம் எப்போது தள்ளுபடி செய்தது? அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள்? ஏன் ஒழுங்காக வாதாடவில்லை? நீங்கள் ஒழுங்காக வாதாடியிருந்தால் அதைத் தள்ளுபடி செய்திருக்க மாட்டார்கள் அல்லவா? ஏன் ஸ்டாலின் சார் வேண்டுமென்றே விட்டுவிட்டாரா? ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாமா? இப்படி எல்லாம் கேள்வி கேட்டால்தான் மேகதாது அணையைப் பற்றிப் பேசினதாக அர்த்தமா? “ஏன் அந்த மாநில முதல்வர் பேசுகிறார், நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றால், நமது மாநிலத்தின் உரிமையை எங்கே நிலைநிறுத்த வேண்டுமோ, அதற்காக வேலை பார்ப்பது மட்டும்தான் முக்கியம். சும்மா சவால் விட்டுக்கொண்டு, “சீண்டிப் பார், நான் யார் தெரியுமா, தொட்டுப் பார்” இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. சும்மா பேசிப் பேசிப் பிரச்சினையை வளர்த்துக்கொண்டு, யார் மேலாவது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அப்புறம் மக்களை அம்போ என்று தெருவில் விட்டுவிட்டு இப்படித்தான் ஓர் அரசியல் செய்ய வேண்டும் என்றால், அந்த அரசியல் நமக்குத் தேவையும் இல்லை, அதை நாம் செய்யப் போவதுமில்லை.
‘டாக் லெஸ் வொர்க் மோர்’ (Talk less, work more) மோடுதான், அதுதான் நமது பாலிசியே!
அதனால்தான் சட்டமன்றத்தில் அந்த அரசினர் தீர்மானம் என்று ஒன்று கொண்டு வந்தோம். அதை எப்படி முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அதைச் சரியாகச் செய்வோம்.
தமிழ்நாட்டுக்கான இடத்தை பறிக்க விடமாட்டோம்
மத்திய அரசிலிருந்து அந்தத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மீண்டும் கொண்டு வரப்போவதாக ஒரு பேச்சு ஒன்று அடிபடுகிறது. யார் என்ன தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தாலும் தமிழ்நாடு அதை ஒத்துக்கொள்ளவே ஒத்துக்கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதைப் பறிக்க விடவும் மாட்டோம்.
இப்படி நாம் இருக்கும்போது இந்தத் தீய சக்தி திமுக எங்கே போய் நிற்கிறது, யார் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும் மக்களே. இந்தத் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் வேறு வேறு எல்லாம் இல்லை, கூட்டுக்களவாணிகள்! சொல்ல முடியுமா உங்களால்? “எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என்று அறிவிக்க முடியுமா, நிரூபிக்க முடியுமா? இந்த வரப்போகிற இடைத்தேர்தலில் அதை நிரூபித்துக் காட்டுங்கள், அப்புறம் பேசுங்கள்.
நினைவுச் சின்னம்
மக்களே, என் மனதை விட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை இனிவரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும் அல்லவா? அதற்காகவே, இனி ஒரு அரசியல் சதியை, அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாது என்பதற்காகவே கரூரில் ஒரு நினைவுச் சின்னம் நமது தவெக சார்பாக அமைக்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்.
அப்புறம் கரூரிலிருந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்கிறேன், உங்கள் தவெக அரசு உங்களுக்காகத்தான் உழைக்கும். அடிப்படை வசதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்; ஒரு பக்கம் நிதி நிலைமையைச் சரி செய்துகொண்டே, இன்னொரு பக்கம் அப்படியே நாம் சொன்னதில் முன்னுரிமை (Priority) பார்த்து ஒவ்வொன்றாகப் படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வோம். இது எப்போதும் உங்களுக்கான அரசாகத்தான் இருக்கும், இந்த விஜய் உங்கள் விஜய்யாகத்தான் இருப்பான். நீங்கள் உரிமையோடு உங்கள் அரசை அணுகலாம்.
ஸ்டாலின் சார் மேல் தனிப் பாசம்
இந்தத் தீயசக்தி ஆட்சி முடிந்து பெட்டிக்குள் போனதிலிருந்தே என்னென்னவோ செய்கிறார்கள், ஏதோ பேசுகிறார்கள், ‘சோபா’ என்கிறார்கள், ‘வாஷிங் மெஷின்’ என்கிறார்கள். இந்த அரசியல் வியாபாரம் செய்வதற்கான அந்த வெண்டிங் மெஷினே அவர்கள்தான், யார் இந்த திமுக! இதில் நம்மைப் பார்த்து வாஷிங் மெஷின் என்கிறார்கள். தேர்தலில் ஓட்டுக்குக் காசு கொடுக்கிற அந்த கலாச்சாரத்தை, அந்தப் பண்பாட்டை அடித்து நொறுக்கியிருக்கிறோம். தேர்தலிலேயே அப்படி வேலை பார்த்த நாம், நமக்கு எதற்கு இந்த குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? மக்கள் என் பக்கம் அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு இந்த பேரம் எல்லாம்?
இந்தத் திருட்டு திமுக ஆட்சியை வைத்துக்கொண்டு ஊரடித்து உலையில் போட்டு இந்தக் கொள்ளையை அடித்ததால்தான், உங்கள் கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் ‘ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு… வரான் பாரு வேட்டைக்காரன்’ என்று ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். வெளிநாடு உடனே ஸ்டாலின் சார் என்று நினைத்துவிடப் போகிறீர்கள், அவர் இல்லை; எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் ஒரு தனிப் பாசம் ஒன்று உண்டு, அவர் கிடையாது. இவர் வேறு, சிங்கப்பூருக்குச் செக்கப்புக்கு போனார் அல்லவா அவர். இன்னும் தோண்டத் தோண்ட எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
உங்களிடம் யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டால் “கொடுக்க முடியாது” என்று சொல்லுங்கள், நான் இருக்கிறேன் உங்களோடு. அப்படியே யாராவது வற்புறுத்தினால், “இது எங்கள் மகன், எங்கள் பிள்ளை, எங்கள் அண்ணன், எங்கள் தம்பி, எங்கள் விஜய், எங்கள் விஜியின் ஆட்சி” என்று உறுதியாகச் சொல்லுங்கள் மக்களே. நீங்கள் கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டுமில்லை, அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுகிற யாராக இருந்தாலும் அடங்கிவிடுவார்கள். இந்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்று ஒரு காலத்தில் கொள்கையோடு இருந்த கட்சி எல்லாம் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
யதார்த்திற்கு வாங்க
அதாவது, இந்த தவெக கட்சியின் தலைவரை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது, ஏனென்றால் உங்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டான். என்ன, இந்த ஊழல் லஞ்சம் எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லி உங்கள் அரசியலை ஒரு தெருமுனைக்குக் கொண்டுவந்து விட்டான், மக்கள் வேறு அவனைத்தான் நம்புகிறார்கள். அதனால், இந்த விஜய்யை எதிர்ப்பதில் ஓர் அரசியல் நியாயம் இருக்கிறது, அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று இந்த விஜய்யை மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்து ஒரு தீர்ப்பைக் கொடுத்து, மக்களுக்காக வேலை செய்வதற்காக முதலமைச்சராக உட்கார வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் இன்னமும் நீங்கள்தான் ஆட்சியில் இருப்பது போல் “விஜய் கரூருக்கெல்லாம் போகக்கூடாது, விஜய் இங்கே போகக்கூடாது, அது செய்யக்கூடாது, இது செய்யக்கூடாது” என்று சொல்வது எனக்குப் புரியவில்லையே! ஆட்சியில் இருக்கும்போதுதான் இவ்வளவு கட்டுப்பாடுகள் எல்லாம் போட்டீர்கள், SOP-கள் எல்லாம் போட்டீர்கள் ஸ்டாலின் சார்… ஆப்ரேட்டிங் புரொசீஜர்ஸ் எல்லாம் போட்டீர்கள் . இப்பொழுதும் அதையே பண்ணிக்கொண்டிருந்தால் என்ன சார் நியாயம்? இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், இன்னும் கனவிலேயே இருக்கிறீர்களா? முதலில் முழித்து வாருங்கள், யதார்த்தத்திற்கு (Reality) வாருங்கள்! உங்கள் ஆட்சி எல்லாம் வீட்டுக்குப்போய் தவெக-வின் ஆட்சி வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
பதவி வெறி
“ஒழுங்காகப் படி, ஒழுங்காகப் படி” என்று உச்ச நீதிமன்றம் ஓங்கி மண்டையிலேயே நருக்கு நருக்கு நருக்கு என்று சம்மட்டியால் அடித்தும் இந்த திமுக முழித்துக்கொள்ளவில்லை என்றால், அப்போ கொஞ்சம் கஷ்டம்தான். வெற்றி தோல்வி எல்லாம் அரசியலில் சகஜம், அதற்காகவெல்லாம் வெறி பிடித்து, இந்தத் பதவி வெறி பிடித்து அலையத் தேவையில்லை. நல்ல விதமாகவே சொல்கிறேன், நியாயமான அரசியல் செய்யுங்கள்; ஓ.. அதுதான் உங்களுக்குத் தெரியாது அல்லவா! இந்தத் தீய சக்தியைத் திருத்தவும் முடியாது, அவர்களாகத் திருந்துவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கப் போவதில்லை. அதனால் வரப்போகிற இடைத்தேர்தலில் மக்களே, இந்தத் தீயசக்தி திமுகவை நன்றாக வைத்து வெளுத்து விடுங்கள். நம்பிக்கையோடு இருங்கள் மக்களே, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்றார்.
‘பணமா, ஜனமா என்று கேட்டால்.. ‘ கரூரில் முதல்வர் விஜய் உருக்கம்
சொன்னதெல்லாம் சும்மா ஒரு சாம்பிள்தான் – திட்டங்களை பட்டியலிட்ட விஜய்
