நெஞ்சில் சாய்ந்து அழுத குடும்பங்கள்… கண்கலங்கிய முதல்வர் விஜய்: மேடையில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று (ஜூலை 10) கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் பெருந்துயர சம்பவத்தில் திமுக தன் மீது பழிபோடுவதாக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது முதல்வர் விஜய்யும், கரூர் பெருந்துயரில் தங்களது அன்பானவர்களை இழந்தவர்களும் மிகவும் எமொஷனலாக காணப்பட்டனர்.

ADVERTISEMENT

ஒவ்வொருவராக மேடை ஏறி பணி நியமன ஆணைகளை வாங்கும் போது முதல்வர் விஜய்யை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் விஜய்யின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுத நிலையில், முதல்வர் விஜய்யும் கண்ணீர் விட்டு அழுதவாறே பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்களிடம் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியும் தேற்றினார்.

இவர்கள் அழுவதை பார்த்த முதல்வர் அருகிலிருந்த அமைச்சர் செங்கோட்டையனும் கண்கலங்கினார்.

ADVERTISEMENT

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட வடிவேல் நகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ”என் அண்ணன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அவர் இன்ஜினியராக இருந்தார். எனக்கு அப்பாவும் இல்லை. இந்த வேலையை வைத்து என் அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்வேன். இந்த துறையிலேயே நன்றாக படித்து அடுத்த நிலைக்கு செல்வேன். நாங்கள் பணியாணை வாங்கும் போது எமோஷனலாகி சிம் அழுதுவிட்டார்” என்றார்.

கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் சங்கவி கூறுகையில், ”எங்கள் குடும்ப சூழ்நிலையை அறிந்து பணி ஆணை வழங்கியிருக்கிறார். இந்த பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். நான் எப்போது உதவியாக இருப்பேன் என்று முதல்வர் கூறினார்” என்று தெரிவித்தார்.

17 வயது மகன் கிஷோரை இழந்த தனலட்சுமி கூறுகையில், ”எனக்கு அப்பா, அம்மா, கணவன் என யாருமே கிடையாது. இந்த வேலை எனக்கு உதவிகரமாக இருக்கும். ஆணை வழங்கும் போது சிஎம் ஃபீல் செய்து அழுதார்” என்றார்.

இந்த பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரூர் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இன்றைக்கு பல குடும்பங்கள் முறிந்து கிடக்கிறது பணி நியமன ஆணை வழங்கும் போது, அங்கு யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. ஒரு இடத்தில் ஒரு தம்பி குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தார்.

அந்த குழந்தை சிரிக்கிறது. அப்பா அழுகிறார். குழந்தை ஏப்பா ஏப்பான்னு  கேட்கிறது. ஒரு நெருக்கடியான சூழலில் தான் அனைவரும் இருந்தார்கள். முதலமைச்சரும் தாங்க முடியாமல் திரும்பி நின்று அழுதார். கொடுக்கிறவர்கள், வாங்குகிறவர்கள் இரு தரப்பினருமே கஷ்டமான மனநிலையில் தான் இருந்தார்கள்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share