மைக் முன்னாடிதான் பேசுறாங்க, ஆக்‌ஷன் இல்லை… 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி!

Published On:

| By Kavi

அனைவரும் மைக் முன்னால் பேசுகின்றனர், ஆனால் ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில், சுமார் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, ”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ”அனைவரும் மைக்கில் ஊழலை பற்றி பேசுகிறார்கள் ஆனால் களத்தில் யாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.98.25 கோடி சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், கே.எஸ்.கந்தசாமி மற்றும் கே.விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு தொடர்பான கோப்பு ஆகஸ்ட் 2025 முதல் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதால், அடுத்த விசாரணையின் போது மத்திய அரசுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறினார்.

அதோடு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், குற்றம் நடந்து 5 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த தேர்தலும் நடந்து விட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share