சொன்னதெல்லாம் சும்மா ஒரு சாம்பிள்தான் – திட்டங்களை பட்டியலிட்ட விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

கரூர் பெருந்துயர சம்பவம் குறித்து உருக்கமாக பேசிய முதல்வர் விஜய் , “மக்களே, உங்களை விட எனக்கு இந்த காசு பணம் முக்கியமா என்ன? இவ்வளவு குறைகள் நம் மேல் சொல்கிறார்களே, இப்போது நான் சொன்னது போல் அவர்களால் ஓப்பனாகச் சொல்ல முடியுமா? அந்தத் தில் இருக்கிறதா, திராணி இருக்கிறதா? ஒருவருக்கும் கிடையாது. ஆனால், நம்மக்கள் அமைத்துக் கொடுத்த நமது அரசின் மேல் குறைகளை மட்டும் டிசைன் டிசைனாக, மாடல் மாடலாகச் சொல்வார்கள்.

ADVERTISEMENT

ஒவ்வொரு துறையிலும் அந்தப் பார்ட்டி ஃபண்ட், அந்தச் கட்சி நிதி என்ற பெயரில் அடிக்கிற கொள்ளை எல்லாம்… இந்தத் தீய சக்தியாக இருக்கட்டும், தீர்ந்துபோன சக்தியாக இருக்கட்டும், இரண்டு பேரும் மாறி மாறி இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Party Fund

இதில் ஒரு ஹைலைட் காமெடி என்னவென்றால், சட்டமன்றத்தில் பேசும்போது பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னேன். அது எந்தப் பார்ட்டி, என்ன ஃபண்ட், யார், என்ன பெயர் என்று எதுவுமே சொல்லவில்லை. பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னவுடனே எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்! எனக்கே முதலில் புரியவில்லை, ஏன்பா ஓடுகிறார்கள், அப்படி நாம் என்ன சொல்லிவிட்டோம் என்று. அதுதான் அந்த “குற்றமுள்ள நெஞ்சுக்குத்தான் குருகுருவென்று இருக்கும்”. இது எப்படி இருக்கிறது தெரியுமா? “எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை, எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை” என்று சொல்வதைப் போல் இருக்கிறது. ஐயோ ஏன் கேட்கிறீர்கள், இவர்களுடையது செம கூத்தாக இருக்கிறது, செம ஃபன்னாக இருக்கிறது.

ADVERTISEMENT

முகமூடி கிழியுது

சென்னையில் ஒரு பாலம் கட்டுவதற்காக சாதாரணமாக ஆகும் செலவை விட அதிக செலவில், கிட்டத்தட்ட இரட்டிப்புச் செலவில் ஒரு டெண்டர் ஒன்று விட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் தோண்டி எடுத்து, அதையெல்லாம் இப்போது கண்டுபிடித்து ரத்து செய்திருக்கிறோம். இன்னும் எத்தனை கோடி ஊழல், எத்தனை லட்சம் கோடி ஊழல் தோண்டத் தோண்ட வருமோ எங்களுக்கே தெரியவில்லை. ஒவ்வொரு முகமூடியாகக் கிழிகிறது. “ஐயோ, இந்த விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியில் விட்டுவிடுவான் போல் இருக்கிறது” என்று திரும்புகிற பக்கமெல்லாம் கதறல், கதறல், கதறல்! காதிலிருந்து இரத்தம் வராத குறைதான். ஆமாம், இப்படி ஊழலிலேயே ஊறிப்போனவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

ஒரு பைசா ஊழல் இல்லை

இந்த 50, 55 நாட்களில் நாங்கள் செய்த சில விஷயங்களைச் சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னேன். ஆனால், இங்கு ஒரு சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மின்சாரத் துறையில், இதற்கு முன்னால் போட முடியாமல் இருந்த அந்தப் பதவி உயர்வை இப்போதுதான் எங்களால் போட முடிந்தது. அதற்காக ஒரு அக்கா அழுதுகொண்டே ஒரு நன்றி சொன்னார்களே, அதெல்லாம் உங்கள் கண்ணில் படாது, அந்த வீடியோ எல்லாம் குறை சொல்கிற உங்களுக்குத் தெரியாது.

ADVERTISEMENT

அடுத்து, “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் இரத்தத்திலேயே ஊறிப்போய் இருக்கிறது” என்று சொன்னவர்கள் போய் ஒவ்வொரு அரசு அலுவலகத்தையும் பாருங்கள். ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஒரு பைசா ஊழல் இல்லை, வேலை எல்லாம் சும்மா டக்கு டக்கு டக்கு என்று நடக்கிறது. ஒரு பெரியவர் ஒருவர் சொல்கிறார், “தம்பி, வேலை எல்லாம் நடக்கிறது, ஆனால் அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் தம்பி, உட்கார வைத்தெல்லாம் பேசுகிறார்கள்; இதெல்லாம் இதற்கு முன்னால் நடந்ததே இல்லை. அவனைப் போய் பார், இவனைப் போய் பார், இந்த அதிகாரியைப் போய் பார் என்று சொல்லி அலைய விடுவார்கள். இப்போது லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வேலை எல்லாம் உடனே உடனே நடக்கிறதே” என்று மக்கள் அப்படி ஒரு பெருமூச்சு ஒன்று விடுகிறார்கள். அதைப் பார்த்து நமக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! இதற்கு மேல் என்ன வேண்டும்? ஏன் இதெல்லாம் பண்ண முடியாது? மனசு என்று ஒன்று இருந்தால் பண்ணலாம், இப்போது நாங்கள் பண்ணல..

அதேபோல் இந்த எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தோடு 18,600 கோடிக்கு மூன்று திட்டங்கள், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு. நான் சொல்வது அந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே அவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

குறுவை சாகுபடிக்காக 134 கோடியில் அந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவித்திருக்கிறோம் நம் விவசாயிகளுக்காக. இப்பொழுதும் சொல்கிறேன், நம் விவசாயப் பெருமக்களே, உங்களின் இந்த அரசு உங்களுடனே நிற்கும்.

பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ அது உங்களுக்கு நன்றாகவே முன்னாடியே தெரியும்.

வரப்போகிற அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாளில், உங்கள் அண்ணனுடைய அரசில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ அறிவிக்கப்படும். இதையெல்லாம் கேட்டார்களே, வாக்குறுதி கொடுத்தீர்களே என்ன ஆயிற்று என்ன ஆயிற்று என்று, இந்தத் தீய சக்தி போல் ரீல் தாய்மாமன் எல்லாம் கிடையாது… ரியல் தாய்மாமன் எப்படி, ரியல்.. ரியல் தாய்மாமன்!

கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

இந்தத் தீய சக்தியைப் பற்றி, அவர்களின் நிர்வாகத்தைப் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிட்டோம் அல்லவா? அதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஓட்டைப் பாத்திரத்திற்குள் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள், பாத்திரம் காலியாகவே இருந்திருக்கிறது. ஆனால், ஊற்றிய தண்ணீர்தான் எங்கே போனது என்று தெரியவில்லை. கடவுளுக்குத்தான் வெளிச்சம். அதுபோல் இப்போது நாம் சொன்னதெல்லாம் சும்மா ஒரு சாம்பிள்தான். இன்னும் வரப்போகிற நாட்களில் உங்கள் அரசின் அந்த விஸ்வரூபத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.

‘பணமா, ஜனமா என்று கேட்டால்.. ‘ கரூரில் முதல்வர் விஜய் உருக்கம்

இன்னும் கனவிலேயே இருக்கிறீர்களா? – திமுகவை விளாசிய முதல்வர் விஜய்!

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share