ஊத்துக்குளி அருகே காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருடைய கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் பல்லடம் பகுதியில் உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர்கள் மீண்டும் பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாகச் சேலம் சாமிநாதபுரத்திற்குத் தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஊத்துக்குளி அடுத்த காக்காபள்ளம் என்ற இடத்தை அடைந்தபோது, விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. லாரி மோதிய வேகத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணித்த கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த ஹேமா படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கார் மீது லாரி மோதி வேகத்தில் லாரியை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
