பள்ளிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் : அரசு பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

பள்ளிகளில் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 9) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. குறிப்பாக பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்களிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலரும் திமுக வழக்கறிஞருமான கவி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ”பள்ளி மாணவர்களைச் சுட்டெரிக்கும் வெயிலில் அமரவைத்து, முழக்கங்களை எழுப்புதல், அரசியல் தலைவரின் புகைப்படங்களை ஏந்துதல், கட்சிக் கொடிகளைப் பிடித்தல், அரசியல் ஆளுமைகளைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுதல், அரசியல் நிகழ்வுகள் சார்ந்த கேக் வெட்டும் விழாக்களில் பங்கேற்றல் அல்லது கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படும்போது, ​​அது அந்த நிறுவனத்தின் நடுநிலைத்தன்மையையும் கல்விச் சூழலையும் நேரடியாகப் பாதிக்கிறது.

கல்வி நிறுவனங்களுக்குள் தவெக கட்சியினர் தங்களது கட்சிக் துண்டுகளை அணிந்து கொண்டு, கட்சித் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் செல்லும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, முதலமைச்சரின் உருவப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்க 3000 மாணவர்களைப் பயன்படுத்தியுள்ளது.

மற்றொரு இடத்தில் ஒரு கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

எனவே, கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்த அரசாணையைக் கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களில் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share