விவசாயிகளுக்குப் பெரும் நிவாரணம்: மத்திய அரசு ஒப்புதல்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டு  விவசாயிகளிடமிருந்து கொப்பரை மற்றும் தோதாபுரி மாம்பழங்களைக்  கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து விவசாயத்துறை அமைச்சகம் நேற்று (ஜூலை 8) வெளியிட்ட அறிவிப்பில்,  ”தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டில் கொப்பரையைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கியுள்ள இந்த ஒப்புதலின் கீழ், மாநிலத்தில் மொத்தம் 87,226 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதில் 87,000 மெட்ரிக் டன் அரைவை கொப்பரையும், 226 மெட்ரிக் டன் உருண்டை கொப்பரையும் அடங்கும்.

ADVERTISEMENT

முழு கொள்முதல் நடவடிக்கையும் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில்  மேற்கொள்ளப்படும். அங்கீகரிக்கப்பட்ட கொள்முதலின் மொத்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் மதிப்பு சுமார்  ரூ. 1,049.16 கோடியாகும்.

இந்த ஒப்புதல்,  தமிழ்நாட்டில் உள்ள கொப்பரை உற்பத்தியாளர்களுக்குக் கட்டுபடியாகும் விலையை உறுதி செய்வதுடன், சந்தை விலை வீழ்ச்சியால் ஏற்படும் மந்தமான விற்பனையிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் உறுதி செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு வருவாய் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், அறிவிக்கப்பட்ட விலையில் தங்கள் விளைபொருட்களைக் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது என்ற நம்பிக்கையும் விவசாயிகளுக்கு ஏற்படும்.

மற்றொரு முக்கிய நிவாரண நடவடிக்கையாக, சந்தை இடையீட்டுத் திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 96,879 மெட்ரிக் டன் தோதாபுரி ரக மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதற்கும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, சந்தை இடையீட்டு விலை குவிண்டாலுக்கு ரூ. 1,545.41 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையில் ஏற்படும் திடீர் சரிவு காரணமாக நஷ்டத்திற்கு விற்க வேண்டிய சூழலிலிருந்து தோதாபுரி  மாம்பழ விவசாயிகளைப் பாதுகாப்பதும், அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ADVERTISEMENT

கொப்பரை மற்றும் தோதாபுரி ரக மாம்பழங்களை பெருமளவில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல்கள், தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பெரும் நிவாரணத்தை அளிக்கும். இத்தகைய நடவடிக்கைகள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share